Tuesday 25 January 2011

"குடியரசு...!"

எட்டிப் பழுத்தாலென்ன..? ஈயாதார் வாழ்ந்தாலென்ன..?
எத்திப் பிழைத்தாலென்ன..? ஏமாற்றித் திரிந்தாலென்ன..?
தட்டி பறித்தாலென்ன..? தானாய் விழுந்தாலென்ன..?
சட்டி உடைந்தாலென்ன..? சடலம் பிழைத்தாலென்ன..?
சான்றோர் அழிந்தாலென்ன..? மாண்டோர் மீண்டாலென்ன..?
நல்லோர் ஒழிந்தாலென்ன..? அல்லோர் மெலிந்தாலென்ன..?
குடிசை எரிந்தாலென்ன..? குடும்பம் கலைந்தாலென்ன..?
குடிப் பெயர்ந்தாலென்ன..? குடிமக்கள் நலிந்தாலென்ன..?
கொள்கை மறந்தாலென்ன..? கூட்டு சேர்ந்தாலென்ன..?
கொள்ளை அடித்தாலென்ன..? பங்கு வைத்தாலென்ன..?
கொடநாடு வாழ்ந்தாலென்ன..? கோபாலபுரம் கொழுத்தாலென்ன..?
வடநாடு செழித்தாலென்ன..? தென்னாடு தேய்ந்தாலென்ன..?
தேர்தல் வந்தாலென்ன..? தேர்ந்து எடுத்தாலென்ன..?

குடிகள் இல்லாவிடத்து குடியரசு இருந்தென்ன..?

மாறாத மக்கள் வாழும் வரை தீராத துன்பம் தொடரும். நமக்கு இதுதான் கிடைத்த வரம். நமக்கு குடியரசு தினம்.
குழந்தைக்கு 'கொடி'யரசு தினம். மிட்டாய்களுக்காக மட்டுமே காத்திருக்கும் ஒரு சமூகம் இந்த கொண்டாட்டத்தில் என்ன கண்டுவிடப் போகிறது..?


தேசியம், தேசியப் பற்று கிஞ்சித்தும் பேசப்படாத நம் பள்ளிகள் நம் தலைமுறைகளுக்கு இழைக்கும் தேசத்துரோகம் கொஞ்சநஞ்சமல்ல. நமக்கு நுனிநாக்கு ஆங்கிலம் முக்கியம். பை நிறைய பணம் முக்கியம். அதை செய்யும் எதுவும் இங்கே சரியான பாதை. அதை எட்டுவதே நமது அன்றாட கொள்கை.

நாம் கடந்து வந்த பாதைகள்... நமக்கு முக்கியமில்லை. நாம் நடந்து சென்ற வீதிகள் நமக்கு பெரிதில்லை. முன்னோரின் வாழ்க்கைத் தந்த அனுபவ பாடம் நமக்கு அனாவசியம். பாரம்பரிய பண்பாடு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள். ஒரு சமூகம் கட்டி எழுப்பப் படும் அடிப்படை கட்டமைப்புகளில் சரிவுகள் ஏற்படும் போது அதில் நமக்கு பங்கில்லை.

சக மனிதன் மரணம் நமக்கு துன்பமில்லை. இன்னொருவன் துயரம் நமக்கு வரவே வராது. நாம் மட்டும் எல்லா சுகங்களும் அடைய வேண்டும். அதற்கான எல்லாவற்றையும் செய்ய அனுமதித்தலே சுதந்திரம். அப்படி செய்யப் படுகிறதா என்பதை பார்த்து பராமரித்தாலே குடியரசு. பாராளுமன்றம் "பள்ளி"யறையாய் மாறினாலும், பலநாள் மூடிக்கிடந்தாலும் நமக்கு அது பற்றி ஏதும் பொறுப்பு இல்லை. அதற்கு ஒபாமா வந்து முரசு கொட்டி உங்க பாராளுமன்றம் மூடிக்கிடக்கு திறந்து வைக்க நான் வருகிறேன்.... வாருங்கள் என்கிற அழைப்பு வந்தால்தான் நமக்கு ஒரு விழிப்பு வரும். சீனாவின் சில்லரைத்தனங்களை முளையில் கிள்ளாமல் வளர விட்டு, வேரோட விட்டு, பின்பு வெட்டும் கோடரியை தேடுவோம்... அல்லது வெளிநாட்டில் கோடரி செய்யச்சொல்லி விலை பேசுவோம். அதிலும் பேரம் பேசி ஊழலில் திளைப்போம்.

இப்படியாக வாழ்ந்து பழக்கப் பட்ட நமக்கு இன்று ஒரு மகத்தான குடியரசு நாள். இந்த நந்நாளில் நாம் சிந்திக்க, நாம் சந்திக்க, நாம் சாதிக்க, எதுவுமே இல்லை.

வாருங்கள் பதிவுலக நண்பர்களே............................

நமக்கு மதுப்புட்டி காத்திருக்கிறது. கிளப்புகள் வெறிச்சோடி கிடக்கின்றன. குத்தாட்ட அழகிகள் காசுக்கு காத்திருக்கிறார்கள். கடற்கரை காற்று நம்மை காணாமல் வறண்டு வீசுகிறது. நமக்கு எவ்வளவோ வேலைகள்.?
கிடைத்திருக்கும் இந்த ஒரு நாள் உபரி விடுமுறையை கொண்டாடாமல் போனால் நம் குலதெய்வம் நம் கண்களை குத்தும். புறப்படுங்கள்.....................

"குடியரசு என்றால் என்ன...? குடிமக்கள் என்பார் யார்..? எதற்காக ஒரு அரசு குடியரசாக இருக்க வேண்டும்..?"

ஐயா, பதிவுலக பெருமக்களே..................

யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.......................

வருத்தமுடன்...
தமிழ்க்காதலன்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

புலவருக்குள் பூகம்பம்.
குடியரசு - முடியரசு செய்து தம் குடி உயர்த்தப் பாடுபடும் ஐயாக்கள் இருக்கும் நாட்டில் வசித்துக் கொண்டு தெனாவெட்டாய் ஒரு கேள்வி.
ஆரம்ப கவிதை நல்லாயிருக்கு.
பள்ளிடத்துல படிக்கும் போதாவது முட்டாயி கெடக்கும். இப்ப அதுவும் போச்சு என்னய்யா குடியரசு.
ஆமா 'குடி'யரசு தானே அப்ப ஏன் டாஸ்மார்க்கெல்லாம் மூடுறாங்க?

Philosophy Prabhakaran said...

உங்களுடைய கோபமும் புரிகிறது... இதையும் கொஞ்சம் படிங்க...

http://krpsenthil.blogspot.com/2011/01/blog-post_26.html