Saturday 8 January 2011

"இப்படியே போனால்"...


என்னங்க எல்லாரும் நலமா இருக்கீங்களா..? நாம இனியும் தொடர்ந்து நலமா இருப்போமா..? என்னாச்சு...? ஏன் இப்படி கேக்குறீங்க..? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது. விசயம் இருக்குங்க... சும்மா சொல்வோமா.

கடந்த பாராளுமன்ற தேர்தல்ல வெற்றிப் பெற்று பெரும்பான்மை இல்லாம கூட்டணி கொலை நிகழ்த்தி சனநாயகம் கொன்று ஆட்சி பிடித்த தனிப் பெரும் கட்சிதாங்க நம்ம காங்கிரசு கட்சி. விளைவு என்ன...? தனிச்சி தன்னிச்சையா எந்த முடிவும் எடுக்க முடியாம, திக்கித் திணறி அரசியல்ல மூச்சி விட்டுக் கொண்டிருக்கிற காங்கிரசு எப்படியாவது தன்னை தக்க வைக்கும் முயற்சியில பல முடிவுகளை எடுத்தது.

அவர்களின் அவசரங்களில் விளைந்த அசிங்கங்கள்....

* உலக பொருளாதார மயமாக்கல்...
* அத்தியாவசிய உணவுப் பொருள்களின் ஆன் லைன் வர்த்தகம்...
* ஏற்றுமதிக் கொள்கையிலும், இறக்குமதி கொள்கையிலும் செய்த தத்து
பித்து மாற்றங்கள்...
* அமெரிக்காவின் கைக்கூலியாய் இந்தியாவை ஆட்டிப் படைப்பது....
* நல்ல நிதியமைச்சர் என்று பெயரெடுத்த "அப்பாவி அறிவு சீவியை", "மோசமான பாரத பிரதமர்" என மாற்றி காட்டியது.
* கட்சியின் அதிகார வரம்புகள் பிரதமரை கட்டுப் படுத்துவது, அரசு கொள்கைகளில் தனக்கு சாதகமானமுடிவுகளை மட்டும் எடுப்பது.
* விலையேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காலம் கடந்து பொது மக்கள், பத்திரிகைகள் சுட்டிக்காட்டி குட்டிய பின் விழித்துக் கொண்டு, கண் கெட்ட பின் சூரியனை வணங்குவது.....

இப்படியாக இந்த தவறான அரசியல் கொள்கையுடைய அரசினால் நாமும் தேசமும் நாறிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே
மொத்த மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களும்தான் அதிகம். மேல்தட்டு மக்கள் குறைவு. ஆனால் மேல்தட்டு மக்கள்தான் நம்முடைய அரசை ஆட்டி வைக்கிறார்கள். பொதுமக்களால் எந்த அரசு அதிகாரியையோ, அரசியல் வாதியையோ தட்டிக் கேட்க முடிவதில்லை.

வருத்தத்துக்குரிய, வெட்க கேடான விசயம் ஒன்று, நம் தேசத்தின் உன்னதமான பாராளுமன்ற நேரத்தை நம் அரசியல் வாதிகளுக்கு பயன் படுத்த தெரியவில்லை. நம்முடைய விலை மதிக்க முடியா பொன்னான நேரம் எப்படி வீணடிக்கப் படுகிறது என்பதை நம்முடைய பாராளுமன்ற நிகழ்வுகள் பார்த்தால் தெரியும்.

அடுத்து நாம் தேர்ந்தேடுக்கும் பாராளுமன்ற எம்.பிக்கள் பாதிக்கு மேல் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. பேசத் தெரிவதில்லை என்பதும் ஒரு பக்க உண்மை. இன்னொரு உண்மை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என்ன என்பது தெரியாமல் இருப்பதும் ஒரு காரணம். நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலட்சியம் அப்படியே பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. நமக்கு தலைவர்கள் மட்டும் சரி இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம்முடைய குடிமகன்கள் சரி இல்லை என்பது மறுக்க முடியா உண்மையாய் இருக்கிறது.

உரிமைகள் கேட்க உரிமை உள்ளவனுக்கு, கடமைகள் செய்யும் பொறுப்பும் காத்திருக்கிறது என்பதை அறியா மக்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து சில விசயங்களில் நம்முடைய இரட்டைத் தன்மைகள் நம்மை உலக அரங்கில் முடிவெடுக்கும் திறமை அற்றவர்களாகத்தான் நம்மைக் காட்டுகிறது. நம்முடைய இளைய சமுதாயம் அளப்பரிய ஆற்றல் பெற்றிருக்கிறது என்று யாரோ முனகும் சப்தம் கேட்கிறது. உண்மைதான். இளைஞர்களின் ஆற்றல் எங்கு பயன்படுகிறது...? நம்முடைய தேசத்திலா..? தேச வளர்ச்சிக்கா..? இல்லையே.. அவர்களின் திறமையை வளர்ந்த நாடுகள் பணத்தால் எடைப் போட்டு வாங்கி கொள்கிறார்கள். நம் அறிவிலும், நம் உழைப்பிலும் அவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் அன்றிலிருந்து இன்று வரை நம் தேசத்தை காட்டிக் கொடுப்பவர்களாகவும்... சுய ஆதாயம் அடையும் குணமும் மாறாதவர்களாகத்தான் இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக்க பயன்படுத்திய இராணுவ வீரர்கள் நம்முடைய இந்தியர்கள். நம்மைக் கொண்டே நம்மை அழித்து நம்மை வைத்தே நம்மை அடிமையாக்கினார்கள். இப்படி செய்வது மாபெரும் துரோகம் என்கிற அறிவு கூட இல்லாமல் சுயநலம் நம்மவர்களை உந்தித் தள்ளி இருக்கிறது.

சரி... இன்றைய தலையாய பிரச்சனையாய் விலைவாசி ஏற்றம் இருக்கிறது. ஒரு கிலோ ஆப்பிளை விட "வெங்காயம்" விலை அதிகம். ஒரு லிட்டர் பாலை விட ஒரு கிலோ "தக்காளி" விலை அதிகம். ஒட்டுமொத்த காய்கறியும், பழங்களும், விலை ஏறிப் போய் இருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்றாற்போல் நம்முடைய வருமானம் இங்கே ஏற்றம் காணவில்லை. இன்னும் இங்கே மாத வருமானம் ரூபாய். 2000 /- தாண்டாதவர்கள் 39 % பேர் இருக்கிறார்கள். அரசு நேரடி அரசாங்க ஊழியர்களான ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை வழங்கி இருக்கிறது. ஒரு அரசாங்க ஆசிரியரை விட தனியாரில் வேலைப் பார்க்கும் ஆசிரியர்கள் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் மாத வருமானம் வெறும் ரூபாய் 4000 முதல் 6000 வரைதான்.

இந்த நிலை ஏன்...? இவர்களின் வாழ்க்கை ஒரு கூலித் தொழிலாளியை விட மோசமானது. தனியார் ஆசிரியர்களை நம்பித்தான் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு உள்ள அரசாங்க ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் அதி மேதாவிகளாய் தங்களை காட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். பொதுவாய் ஒரு பள்ளி ஒரு ஆசிரியரை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய அளவை கூட ஒரு அரசாங்கத்தால் நிர்ணயிக்க முடியவில்லை என்றால் இங்கே என்ன சனநாயகத்தை இவர்கள் கட்டி காக்கிறார்கள்..? ஒருவருக்கு ரூபாய். 18000 ம் சம்பளமும், அதே வேளை செய்யும் மற்றொருவருக்கு ரூபாய்.6000 சம்பளம் என்றால் எப்படி இது சனநாயகம் ஆகும். அவர்களின் வாழ்க்கை எப்படி உயரும்...?
பொதுத் தன்மை இல்லாத கொள்கைகள்... எல்லோருக்கும் சமமான பொருளாதார முன்னேற்றம், கல்வி, ஏன் நம்மால் வழங்க முடியவில்லை. ஒரே காரணம்.... நம்மிடம் பொது நோக்கமில்லை. மனம் இல்லை. மற்றவர்களின் தாழ்மையிலும், ஏழ்மையிலும் நம்மை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள நினைக்கிறோமே தவிர மனிதர்களை சமமாய் பாவிக்கும் மனோ பக்குவம் இல்லாத குணத்தால் நாம் இன்னும் இழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்.

நாம் நலமாயிருக்க நம்முடைய அயலானும் நலமாய் இருக்க வேண்டும்....

இனியேனும் அதை செய்வோமா...?

ஏக்கத்துடன்...
-தமிழ்க்காதலன்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

//நாம் நலமாயிருக்க நம்முடைய அயலானும் நலமாய் இருக்க வேண்டும்//

யார் மனதில் நண்பா இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. சொல்லுங்கள்... பார்க்கலாம்.