Friday 25 March 2011

"கலைஞர் என்கிற கருணாநிதிக்கு"
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரேத் தலைவர் என சொல்லப் படுகிற (தன்னை சுற்றி இருப்பவர்களால் மட்டும்), அல்லது சொல்லிக் கொள்கிற தற்போதைய தமிழக முதல்வர் திரு.கலைஞர் என்கிற கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். இந்த தமிழகத்தின் ஒரு சாதாரண குடிமகனாய் உங்களிடம் நான் சில விபரங்களையும், கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன். தமிழகத்தின் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க அயராது பாடுபடும் தாங்கள், எமது வினாவுக்கு விடைப் பகன்றால் எம் போன்ற சாதாரண பாமரனின் கவலையும், துயரமும் நிச்சயம் தீரும்.

1969 - 1980 கள் வரையான காலங்களில் ஒரு தி.மு.க தலைவர் இருந்தார். அவர் மு.கருணாநிதி.
1950 - 1969 கள் வரையான காலங்களில் ஒரு தமிழ்த் தொண்டன் தி.மு.க வில் இருந்தார். அவர் அண்ணாவின் தம்பி, போர்ப்படை தளபதி, இவரை நீங்கள் அறிவீர்களா..? அறிவாலயத்தில் வீற்றிருந்த அரிமா அந்த மனிதர். தற்போது அவரை எங்கேனும் பார்த்ததுண்டா... நீங்கள்..?

1980 க்கு பிறகு இங்கே ஒருவர் இருக்கிறார்... தி.மு.க எனும் பொதுசொத்தை தனக்கும், தன் மக்களுக்கும் மட்டுமே சொந்தமான பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றிக்கொண்டு, தன் குடும்ப சொத்து மதிப்பை உலக அளவில் உயர்த்திக்கொண்டு.... பிள்ளைகளுக்குப் பின் பேரப்பிள்ளைகள் வரை தனது ஆட்சி நீடிக்க என்ன வழி எனக் கண்டு பிடித்து மக்களை முட்டாளாக்கி, அப்படியும் இப்படியமாய் ஒரு சுயநலப் போக்கை கையாண்டு, அதற்காக இதுவரை இருப்பதாக சொல்லிவந்த தன்மானம், திராவிட பாரம்பரியம், தமிழர் உணர்வு, ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாய் அடகுவைத்து, தற்போது விற்றே விட்ட அந்த மனிதரின் பெயர்..........

கலைஞர்............

என்கிறது தமிழ்நாடு.
தமிழை உச்சரித்து, தமிழுக்காய் போராடி, பலரின் பாராட்டை பெற்ற அந்த கருணாநிதி, கலைஞராய் மாறியப் பின் கண்டதெல்லாம் "தன்னலம்" மட்டுமே. இப்படி ஒரு அவதாரம் எடுத்து இருந்த புகழையும் இலங்கைத் தமிழன் பிரச்சனை மூலம் இழந்து நிற்கும் அவலம் எதற்காக..? இலங்கைத் தமிழன் மட்டுமல்ல, இங்கிருக்கும் தமிழனும் இப்படித்தான் நினைக்கிறான். கொஞ்சம் உங்களை சுற்றி இருக்கும் உங்கள் சால்ரா தட்டும் மக்களைத் தாண்டி, சினிமாவைத் தாண்டி, வெளியே வந்து ஒரு பாமரன், ஒரு சாமானியனிடம் பேசிப்பாருங்கள். புரியும்.

மக்களிடம் இலட்சியம் பேசி, மேடைகளில் கொள்கைகள் முழங்கி, தமிழைப் பேசி வோட்டு வாங்கிய உங்கள் தன்னம்பிக்கை இப்போது எங்கே..? எதற்காக இப்போது இலவசங்களை சொல்லிச் சொல்லி வோட்டுக் கேட்கிறீர்கள்..? இலவசங்களை தந்து என் போன்ற சாதாரணத் தமிழனை உலக அளவில் பிச்சைக் காரனாய் காட்டும் அதிகாரம் உங்களுக்கு தந்தது யார்..? தமிழர்களுக்கு நியாயமாய் செய்திருக்க வேண்டிய கடமைகளை, பொறுப்புகளை திராவிடக் கழகங்கள் செய்திருந்தால் இந்த மாநிலம் இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாய் மாறி இருக்கும் என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்தி எதிர்ப்பில், மக்களை ஏமாற்றி விட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்தி கற்க செய்த மர்மம் நாடறியும். வீராணம் ஏரி திட்டத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதம், மதுக்கடையை மாநிலத்தில் அவிழ்த்து விட்டு மக்களை குடிகாரனாக்கியது. எதிர்க் கட்சியாய் இருக்கும்போது மட்டும் செயல்படுவது, மாநில அவலங்கள் பேசுவது, தான் ஆட்சிக்கு வந்த பிறகு அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, இப்படி இதைத்தானே மாறி மாறி செய்தீர்கள்.

உங்கள் முகம் மக்களிடம் எடுபடாமல் போன காலகட்டம், வெறும்பேச்சுக்கு மயங்காத கூட்டம் பார்த்து இலவசம் எனும் எலும்புத்துண்டை கையில் எடுத்து விட்டீர்கள். இந்த இலவசங்களுக்குப் பின் உள்ள விவரங்களை உங்களால் தர முடியுமா..?


நீங்கள் 2006 ல் ஆட்சிக்கு வந்தபோது....

# தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம், மற்றும் செலவுக் கணக்குகளையும், தனி நபர் மீதான கடன் விபரமும்,

தற்போது நடப்பு ஆண்டு வருமானம், செலவு, தனிநபர்க் கடன் பற்றி வெளிப்படையாய் வெளியிட முடியுமா..?

# உங்களின் இலவசத் திட்டங்களுக்காக தாங்கள் எந்த வருமானத்தை பயன்படுத்தினீர்கள்..? இதற்கான மொத்த செலவுகள் பற்றி சொல்ல முடியுமா..? உலக வங்கி மற்றும், மத்திய அரசாங்கத்தின் கடன், பற்றி வெளியிட முடியுமா..?

# அரசாங்கத்தில் இதுவரை ஒதுக்கிய துறை சார்ந்த ஒதுக்கிடுகளை, தாங்கள் தவறாக பயன்படுத்த வில்லை என உத்திரவாதம் தர முடியுமா..?

# மத்திய அரசாங்கத்தின் உதவித்தொகைகளை, மாநில அரசாங்கம் தருவதாகச் சொல்லி ஏமாற்ற வில்லையா..?
எல்லாப் புகழையும் தானே அடைய வேண்டும் என்கிற வேட்கை உங்களை கடைசிக்காலத்தில் இப்படி கண்மூடித்தனமாய் செயல்பட வைக்கிறது.

# எதிரிகள் இருக்கக் கூடாது என்பது உங்களின் இப்போதைய கொள்கை. இருந்தால் ஒழித்துக்கட்ட பிரயத்தனம் செய்து அதையும் வெளியில் தெரியாமல் மறைத்து விடும் புத்திசாலித் தனம். அரசியல் சாணக்கியத்தனம்.

# உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு முறையும் வன்முறையும், வன்முறையாளர்களும் சகசமாய் கட்டவிழ்த்து விடப்படும் காரணம் என்ன..?

# உற்பத்தியைப் பற்றி பேசாமல், உற்பத்தியை உயர்த்தாமல் இலவசங்கள் எனும் பெயரில், மின்சாரம், சமையல் வாயு, போன்றவற்றின் உபயோகத்தை திடீரென உயர்த்தி அதன் மூலம் செயற்கையான தேவையை அதிகரிக்கச் செய்து, நாட்டில் பொருளாதாரம் சீர்குலையவும், விலை ஏறவும் காரணமாகவில்லையா..?

# அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற நீங்களும் ஒரு முக்கிய காரணம். இலவச வீடு, இலவச அரிசி என நீங்கள் வாய்த் திறந்த வினாடிகளில் இருந்தே.... கண்மூடித்தனமாய் அநியாயமாய் விலை ஏற்றி விற்கப்படும் பொருட்களை பற்றி யோசிக்காமல், வெறும் திட்டங்கள் மூலம் தனி நபர்களை கடனாளியாக்கியது தவிர, தங்களின் சமீபத்திய சாதனை என்ன..?

# இலவசமாய் அரசாங்க செலவில் கிழக்கு கடற்கரை சாலையில் எம்.எல்.ஏக்களுக்கு சொந்த பட்டா என்பது நியாயமா..?

# உங்களின் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய சொத்துக்கணக்கையும், வருமானத்தையும் சொல்ல முடியுமா..?

# ஆக ஒரு கூட்டமாய் சேர்ந்து கொள்ளை அடிப்பதை சாமானியனாய் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு.


உங்களின் தனிப்பட்ட சாதனைகள் எதுவும் இருக்காது என்பது தெளிவாகிறது.

இந்த தள்ளாத வயதில் தாங்கள் ஓய்வெடுக்க விரும்பாமல் இடத்தை தக்க வைக்க போராடும் தன்மையைப் பார்த்தால் உங்களின் பதவி வெறி பட்டவர்த்தனமாய் தெரிகிறது.

காமராசரிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.....

பெரியாரிடம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது....

கக்கனிடம் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது....

அண்ணாவிடமிருந்து நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது....

இன்னும் இருக்கிறது ஏராளம்....

நீங்கள் முழுமையடையா வாழ்க்கையில் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

உங்களுக்கு திருப்தி என்பது எப்போது வரும்.....?????????????

தமிழகத்தை எப்போது விடப் போகிறீர்கள்...??

தார்மீக பொறுப்பேற்று பதில் சொல்ல முடியுமா...?

பதிலுக்காய்...காத்திருக்கும்,

தமிழ்க்காதலன்.

Friday 11 March 2011

"மாத்தி யோசி..."


எனதன்பு தமிழுலகுக்கு, வணக்கமுங்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை தமிழ்த்தென்றலில் சந்திக்கிறேன். நாடும் நாமும் ஒரு திருப்புமுனையை சந்திக்கும் தருவாயில் உங்களை சந்திக்கிறேன். கொஞ்சம் நம்மைப் பற்றி சிந்திக்கிறேன்.

நமது இந்தியாவில் வளைகுடா நாடுகளைப் போல மன்னராட்சி நடக்குது என எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்படி சொல்கிறேன் என நினைக்கிறீர்களா..? நம்முடைய தேசம் சுதந்திரம் அடைந்தது என்பதை ஏற்க முடியாத அளவுக்கு இங்கே நிகழ்வுகள் தொடர்கின்றன.

. வாரிசு அரசியல் : நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என மத்தியில் தொடரும் ஒரு பரம்பரை ஆட்சி முறை. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என மாநிலங்களில் தொடரும் பரம்பரை ஆட்சிமுறை. இங்கே எங்கே சனநாயகம் இருக்கிறது. காங்கிரசும், தி.மு.கவும் இவர்களின் பரம்பரை சொத்து என எண்ணிக கொண்டு செயல்படுகிறார்கள். இதை அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லை. காரணம், இவர்களின் வழிகாட்டலில் அவர்களும், தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தியே அரசியல் செய்கிறார்கள். எம்.எல்.ஏ வின் மகன் என்.எல்.ஏ, எம்.பி மகன் எம்.பி, மாவட்ட, வட்டங்களின் வாரிசுகளுக்கு தொடரும் அதிகார பொறுப்புகள்..... இப்படி தொடர்ந்து நடக்கும் ஒரு அரசியலமைப்பை இப்படி சனநாயக அமைப்பு என சொல்வது...?

. பொம்மைத் தலைவர்கள்: மேற்கண்டவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்காத போது இடையில் சொருகப்பட்ட துருப்புச் சீட்டாய் மற்றவர்களை அதிகாரமில்லாத் தலைவர்களாய் கையாள்கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கபட்ட நபர் மன்மோகன் சிங். ஒரு சோளக்காட்டு பொம்மை போல அவருடைய நிலைமை மிக மோசமாய் இருக்கிறது. இந்த தேசத்தின் எல்லாப் பெரிய அழிவுகளும் இவர் காலத்தில் நடந்ததாகவோ, அல்லது அடிக்கோலப்பட்டதாகவோ நாளைய தலைமுறை பேசும் என்பதில் சந்தேகம் இல்லை. அன்னை என்கிற பட்டம் பெற்ற சோனியா பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் வெளியில் வரும் நாள் தொலைவில் இல்லை.

. தூக்குத்தூக்கிகள்: ஒரு தேசத்தின் தலைவர்கள் தவறு செய்யாவண்ணம் அவர்களை வழிநடத்தத் தான் பாராளுமன்றம். அது இங்கே ஒரு நாளும் அந்த கடமைகளை பொறுப்பாய் செய்ததாக தெரியவில்லை. "தண்டனைகள் வழங்க தலைமுறைகள் தாண்டும் நாடு" என்கிற நிலையில் நம்முடைய சட்டமும் நாடும் இருப்பதால், இங்கே "தூக்குத்தூக்கி" வாழ்க்கையில் இலாபம் பார்க்கும் நம்முடைய அமைச்சர்கள்....

. சரத்பவார்: இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் "எண்டோசல்பான்" என்கிற பூச்சிக்கொல்லி மருந்து பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது, சரத்பவார் பதில் தருகிறார், இந்திய விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து அனுமதித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார். நான் கேட்கிறேன்.... இந்தியாவின் அனைத்து அறிவியல் துறைகளிலும் விஞ்ஞானிகளின் சிபாரிசுகள் எடுபட்டிருக்கிறதா..? அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நம்முடைய அனைத்து தரப்பு விஞ்ஞானிகளும் எதிர்ப்புத் தெரிவித்தும் அமெரிக்காவுக்கு அடிமையாய் காங்கிரஸ் செயல்பட்ட விதம் நாடு அறியும்.

. பி.டி கத்திரிக்காய் முதல் அனைத்து விவசாய விதைகளுக்கும் இனி நாம் வெளிநாட்டினரிடம் விதை வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது இந்த அரசு. நம்முடைய பாரம்பரிய விதைகளை அழித்து விட்டு சில தனியார் நிறுவனங்கள் தரும் விதையை நம்பி ஒரு நாடு விவசாயம் செய்தால், விவசாயம் இப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். தடை செய்யப்பட்ட மருந்தும், காய்கறியும், செடியும் நம் தலையில் கட்டாயமாய் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன...?
௬. நல்ல தேயிலை இங்கே அரிதாய் கிடைக்கிறது. நல்ல சர்க்கரை இங்கே கிடைப்பதில்லை. உணவுப் பொருள்களில் முதல்தரமானதை இலாப நோக்குடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பைகளை அடைத்து விற்கும் அநாகரீகம் இங்கேதான் நடக்கிறது. கேட்டால் நம்முடைய மக்களின் வாங்கும் திறன் குறைவு என ஒரு சப்பைக்கட்டுக் காரணம். ஒரு தேசத்தில் உற்பத்தியாகும் பொருளை அந்த தேசத்து மக்கள் வாங்க முடியா நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது யாருடைய குற்றம்..? இதை தொடர்ந்து செய்யும் காங்கிரசை என்ன செய்யலாம். நமக்கு நம்முடைய கரும்பு தரும் சர்க்கரையை திண்ணவும், தேயிலையை குடிக்கவும் நமக்கு உரிமையில்லாத நிலையில் நாம் இருக்கிறோம்.

. தேசத்தின் பிரச்சனைகளைப் பேச, மக்களின் குறைகளை களைய தில்லிப் போகாத முதல்வர்கள், தங்களின் ஆட்சி பீடம் தக்கவைக்கவும், மகன்களின், மகள்களின் சீட்டுக்காகவும் தில்லிப் போகும் சுயநல பதர்களைத்தான் நாம் தலைவர்கள் எனக் கொண்டிருக்கிறோம். இனியேனும் எண்ணிப்பார்ப்போம் என்ன செய்யாலாம்...? என்பதை.
நம்முடைய உரிமைகளையும் கடமைகளையும் வென்றெடுப்போம்.


. இந்த மாறுதல் தராத தேர்தலில், இம்முறையாவது சிந்தித்து செயல்படுவோம்... இலவசங்களுக்கு சோரம் போனதின் விளைவுகளை இன்றைய விலைவாசிகளில் உணர்கிறோம். தப்பான ஆட்சிக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறேதுவுமாகவும் இருந்துவிட முடியாது என்பதற்கு சான்றாக நம்முடைய மாநில ஆட்சி.

மாத்தி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாற்றுத் தேவை. அவசியம் மாற்றுவோம். மாறுவோம்.
இல்லையெனில் அடுத்த முறை குடிக்க கூட சிறுநீரை தூய்மைப் படுத்தும் இலவசத் திட்டங்கள் உங்கள் முன்னாள் வைக்கப் படும். யோசியுங்கள்.விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்.....

வேறு சங்கதியுடன்.....

என்றும் தமிழனாய்.....
தமிழ்க்காதலன்.


Sunday 30 January 2011

"ஒதுக்கப்படும் இந்தியன்...?"


நிலத்தில் பிறந்து நீரில் வாழும்
நிலநீர்
வாழ்வனவாய் எங்களின் வாழ்க்கை.

கலங்களிலும்
, கட்டுமரங்களிலும்

கழியும்
எங்கள் காலம்.


தோணியைக்
கொண்டு

தொப்புள்கொடி
வளர்க்கிறோம்.

தொலைதூர
கடலில்
வாழ்வைத் தேடி
தொலைந்து
போகிறோம்.

வறுமைக்கு
அஞ்சவில்லை....!

வளமைக்கு
பஞ்சமில்லை....!!


கரை
காணா கடலில்......
உப்புக்காற்றில் உயிர்த்திருக்கும்
எங்கள்
சுவாசம்.


"மீன்களைப்
பிடிக்கும் கருவாடாய் நாங்கள்"...

கசங்கித்தான்
போகிறோம்....

கண்கலங்கி
வாழ்கிறோம்.


எவர்
வாழ்விலும் நாங்கள் மண்ணை போட முடியாது.

தண்ணீரில்
வாழும் தவளைகள் நாங்கள்.

முதலைகளை
விட அதிக பயம் தரும்
எங்கள் முதலாளிகள்.

மனிதர்களாய்
கூட மதிக்காத
எங்கள்
தேசத்து மந்திரிகள்.


மரணத்தை
மடியில் கட்டிக் கொண்டு
கண்ணுக்குத் தெரியா ஆழ்கடலில் காத்திருக்கிறோம்.
வளையில்
சிக்கும் மீன்களுக்காய்...

................................................................
வசமாய்
சிக்குகிறோம்......
சிங்களவன்
வளையில்
மீன்களாய்
நாங்கள்.


துப்பாக்கி
தோட்டா தொட்டுப் பார்க்க பயம்.

தோட்டாக்களை
முத்தமிட்டே
கிழிக்கப்
படும்
எங்கள் உதடுகளில்
இன்னுமிருக்கிறது
இந்தியாவின் மீதான நம்பிக்கை ................................................
கடைசிப்
புன்னகையாய்...!!


சிறுமீன்
வலைவிழுமின் மீண்டும்
கடல் சேர்க்கும் எங்கள் கருணை....
ஏன் இல்லாமல் போனது இந்திய அரசுக்கு...?
வலைசிக்கிய
மீனாய் வாடும் எங்கள் வாழ்க்கை.


கடலில்
மிதக்கும் எங்கள் பிணங்களை

கடல்
தாய் கரைசேர்க்கும் பொறுப்பு
காணமுடியவில்லை இந்த அரசிடம்...

எவரும்
கண்டு கொள்ளா எச்சங்களா நாங்கள்....?

இந்திய
அரசாங்கத்தின் மிச்சங்களா நாங்கள்...?


கரைக்கும்
கடலுக்கும் இடையே கண்ணீர் சிந்தும் போதா
உதவிக்கரம் கேட்கிறோம்....?
செந்நீர்
சிந்தும் போதுதானே கேட்கிறோம்...


நிராயுதபாணியாய்
நிற்கும் வீரனை
கொல்லாதே என்கிறது யுத்ததர்மம்.
மீனவனை
கொல்லலாம் என எங்கேனுமுண்டோ...?!


எந்த தர்மமும் அறியா அதர்மம் அங்கே....
ஆழ்கடலில் இந்திய இறையாண்மையை விலை பேசுகிறது.

வயிற்றுப்
பிழைப்புக்கு வந்தவனை
வன்முறையாளன் என்கிறான் சிங்களன்.
வாய்மூடி
நிற்கிறாயே என் தேசமே..........??!!


வாய்மையே
வெல்லும்......?!

எங்கே
...? எப்போது...?

வந்தே
மாதரம்........!

வங்கக்கடல்
யார் சொந்தம்...?

ஜெய்
ஹிந்த்.........!

சாகும்
போது சொல்லிக்கொள்ளும்
தாரக
மந்திரமோ....!


வீரம்
விளைந்த என் தேசமே...........

சோரம்
போகும் புத்தி உனக்கெப்படி
சொந்தமானது.........?
பங்காளிக்கு
பந்தி வைக்கலாம் ....,- நீ

பகையாளிக்கல்லவா
பந்தி வைக்கிறாய்...!

முடிச்சிட்டவனுக்கு
முந்தி விரிக்கலாம்
முகமூடிக்கு விரிக்கலாமோ....?!

இந்தியாவின்
எல்லை தில்லி மட்டும்தான்....

பிரதமரின்
குடும்பத்துக்கு வேண்டியவர்கள் மட்டுமே இந்தியர்கள்
காங்கிரசுக்கு சொந்தமானவர்கள் மட்டுமே இந்தியாவின் வாரிசுகள்.

கடலுக்கு
சொந்தமான நாங்கள்.....
"எடுப்பார் கைப்பிள்ளை",- எங்களை
கண்டவனும் சுடலாம்.......
அவன்
வாய் சிவக்கும் வெற்றிலைக்கு சுண்ணாம்பாய்

எங்கள்
இரத்தம்....


கேளுங்கள்
இந்திய குடிமகன்களே...........

வருங்காலத்தில்
கடல்நீரின் நிறம் நீலமல்ல...!!
இரத்தச் சிவப்பு.

எழுதிக்கொள்ளுங்கள்
........

உங்கள்
பாடத்திட்டத்தில் ........

இந்தியாவில்
'மீனவன்' என்றொரு இனம் இருந்தது என்று....
இந்திய அரசின் கையாலாகத் தனத்தினால்
கடலுக்குள் காணாமல் போனவர்கள் என்று....

கடலும்
நிலமும் காப்பாற்றிய ஒரு இனம்
கவனிப்பாரற்று
கடலுக்குள் அழிந்து போனக்
கதையை
உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.

தமிழகத்துக்
கடற்கரைகளில்.....
இனி நண்டுகள் கூட நகராது.
தமிழகத்து மண்ணில் மனிதம் நேசிக்கும்
தலைவனை பெற்றெடுக்கும்
தமிழச்சிகள்
இல்லையோ....?


எங்கள்
சாபங்களை உங்களின் வரமென எண்ணாதீர்கள்...?


கணவனுக்காய்
கனவுகள் சுமந்து கரையில் காத்திருக்கும்
செம்படவச்சியாய் கொஞ்சம் சிந்தியுங்கள்....
வருவான்
.... வாழ்க்கைத் தருவான் என்கிற
நம்பிக்கையில்
........
துப்பாக்கித்
தோட்டாக்கள்
தின்று
தீர்த்த
மிச்சங்களை தராதீர்கள்.......
அவள் தாலிப் பறிக்காதீர்கள்...
கலங்கும்
கண்களுடன் கடல் நோக்கும்

பிஞ்சு
உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்...


ஓன்று
...........

நாங்கள்
இந்திய குடிமகன்கள் என்றால்......

நிரந்தரமாய்
ஒரு தீர்வுக்கு வாருங்கள்....
எங்களின்
நிம்மதிக்காய்......

திரைமறைவு
நாடகங்கள் வேண்டாம்.

தீர்க்கப்
பட வேண்டிய வாழ்க்கை இது.


மற்றொன்று
...........

எங்களை
"இந்தியாவின் குடிமகன் இல்லை" என்றறிவித்து விடுங்கள்.
உங்களிடமிருந்து "எங்களின் அடையாளங்களை" அழித்து விடுங்கள்.

சர்வதேச
சந்தையில் சாதாரணமாய் கிடைக்கிறதாம்.......

அத்தனை
ஆயுதங்களும்............


நாங்களே
பார்த்துக்கொள்கிறோம்....... சிங்களவனை

பார்த்துப்
பார்த்துக் கொல்கிறோம்.


எங்கள்
கைகளிலும் உரமிருக்கிறது.
எங்கள் நெஞ்சிலும் திமிரிருக்கிறது.

கடல் எங்களுக்கு அத்துபடி..!
காற்று
எங்கள் அத்தைமடி..!!

எங்கள்
கரங்களிலும், கட்டுமரங்களிலும்
ஏ.கே - 47.

இன்னும்
நவீன ஆயுதம் ஏந்தி மீன் பிடிப்போம்.


அப்போது
வீழ்வது தமிழனல்ல...

அப்போது
சாவது தமிழனல்ல...


எங்கள்
பிள்ளைகளுக்கு தோட்டாக்கள் வைத்து
கணக்குச் சொல்லிக்கொடுங்கள்.
துப்பாக்கி
நிறுத்தி தாண்டச் சொல்லுங்கள்.


எதற்கும்
உதவாத ஒரு இராணுவத்தை விட
உயிர்க் காக்கும் எங்கள் உறவுகள் மேல்....
எங்களை
நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.


முடிவெடுங்கள்
................


நாங்கள்
மடிந்து அழியும் முன்.......


உங்களின்
பதிலுக்காய்........


வாழ்வை எதிர்நோக்கி காத்திருக்கும்
மீனவனாய்............
-தமிழ்க்காதலன்.
"வேள்வித் தீயில்..."

விடுதலை வேள்விக்கு....
உதிரத்தை நெய்யாக்கி
உணர்வினை திரியாக்கி
தன்னுயிர் சுடரில் ...
விடுதலை தீபம் ஏந்தி
விடிவென்னும் விளக்கேற்றிய

அத்தனை ஆன்மாக்களுக்கும்
இந்த தேசத்தை நேசிக்கும்
குடிமகன்களின் சார்பில்
தமிழ்க் காதலனின்........
தியாக வணக்கங்கள் சமர்ப்பணம்.

பெயர் தெரிந்த பெரியவர்கள் விடுத்து,
பெயர் தெரியா தேசத் தியாகிகளுக்கு
இந்த சமர்ப்பணம் முதலில் சேர வேண்டும்.


வாழ்க்கையின் மொத்தமும்
வாடி வதங்கிச் சிறையில்.......
சருகாகி சாம்பலான பேரான்மாக்களுக்கும்,
சத்தமில்லாமல் சருகாகிப் போன
சாமானியனுக்கும், அந்நியன் பிரம்புக்கும்
சட்ட வரம்புக்கும் உயிர் உதிர்த்திட்ட
சரித்திர உத்தமர்களுக்கும்..,
தியாகம் விதைத்து, தேசம் வளர்த்த
திருநாட்டின் மக்களுக்கும்,
குடிமகனாய் கடமையாற்றி
தேசியம் கட்டமைத்த பெரியோர்களுக்கும்
,
தியாகிகள் நினைவு நாளில்.....

திருவடிகளில்.......
தேசத்தின் சார்பாக...
மௌனத்தை அஞ்சலியாக்கி
மறுபடியும் சுதந்திர போராட்டம்

வெடிக்கும் இம்மண்ணில்.....
சுதந்திரம் மீட்டெடுக்க
உத்தமர்களை உருவாக்க

உறுதி பூணும் இந்நாளில்

தேசியம் காக்க..,
தோள் கொடுங்கள் தோழர்களே.....

தோழமையுடன்,
-தமிழ்க்காதலன்.

Tuesday 25 January 2011

"குடியரசு...!"

எட்டிப் பழுத்தாலென்ன..? ஈயாதார் வாழ்ந்தாலென்ன..?
எத்திப் பிழைத்தாலென்ன..? ஏமாற்றித் திரிந்தாலென்ன..?
தட்டி பறித்தாலென்ன..? தானாய் விழுந்தாலென்ன..?
சட்டி உடைந்தாலென்ன..? சடலம் பிழைத்தாலென்ன..?
சான்றோர் அழிந்தாலென்ன..? மாண்டோர் மீண்டாலென்ன..?
நல்லோர் ஒழிந்தாலென்ன..? அல்லோர் மெலிந்தாலென்ன..?
குடிசை எரிந்தாலென்ன..? குடும்பம் கலைந்தாலென்ன..?
குடிப் பெயர்ந்தாலென்ன..? குடிமக்கள் நலிந்தாலென்ன..?
கொள்கை மறந்தாலென்ன..? கூட்டு சேர்ந்தாலென்ன..?
கொள்ளை அடித்தாலென்ன..? பங்கு வைத்தாலென்ன..?
கொடநாடு வாழ்ந்தாலென்ன..? கோபாலபுரம் கொழுத்தாலென்ன..?
வடநாடு செழித்தாலென்ன..? தென்னாடு தேய்ந்தாலென்ன..?
தேர்தல் வந்தாலென்ன..? தேர்ந்து எடுத்தாலென்ன..?

குடிகள் இல்லாவிடத்து குடியரசு இருந்தென்ன..?

மாறாத மக்கள் வாழும் வரை தீராத துன்பம் தொடரும். நமக்கு இதுதான் கிடைத்த வரம். நமக்கு குடியரசு தினம்.
குழந்தைக்கு 'கொடி'யரசு தினம். மிட்டாய்களுக்காக மட்டுமே காத்திருக்கும் ஒரு சமூகம் இந்த கொண்டாட்டத்தில் என்ன கண்டுவிடப் போகிறது..?


தேசியம், தேசியப் பற்று கிஞ்சித்தும் பேசப்படாத நம் பள்ளிகள் நம் தலைமுறைகளுக்கு இழைக்கும் தேசத்துரோகம் கொஞ்சநஞ்சமல்ல. நமக்கு நுனிநாக்கு ஆங்கிலம் முக்கியம். பை நிறைய பணம் முக்கியம். அதை செய்யும் எதுவும் இங்கே சரியான பாதை. அதை எட்டுவதே நமது அன்றாட கொள்கை.

நாம் கடந்து வந்த பாதைகள்... நமக்கு முக்கியமில்லை. நாம் நடந்து சென்ற வீதிகள் நமக்கு பெரிதில்லை. முன்னோரின் வாழ்க்கைத் தந்த அனுபவ பாடம் நமக்கு அனாவசியம். பாரம்பரிய பண்பாடு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள். ஒரு சமூகம் கட்டி எழுப்பப் படும் அடிப்படை கட்டமைப்புகளில் சரிவுகள் ஏற்படும் போது அதில் நமக்கு பங்கில்லை.

சக மனிதன் மரணம் நமக்கு துன்பமில்லை. இன்னொருவன் துயரம் நமக்கு வரவே வராது. நாம் மட்டும் எல்லா சுகங்களும் அடைய வேண்டும். அதற்கான எல்லாவற்றையும் செய்ய அனுமதித்தலே சுதந்திரம். அப்படி செய்யப் படுகிறதா என்பதை பார்த்து பராமரித்தாலே குடியரசு. பாராளுமன்றம் "பள்ளி"யறையாய் மாறினாலும், பலநாள் மூடிக்கிடந்தாலும் நமக்கு அது பற்றி ஏதும் பொறுப்பு இல்லை. அதற்கு ஒபாமா வந்து முரசு கொட்டி உங்க பாராளுமன்றம் மூடிக்கிடக்கு திறந்து வைக்க நான் வருகிறேன்.... வாருங்கள் என்கிற அழைப்பு வந்தால்தான் நமக்கு ஒரு விழிப்பு வரும். சீனாவின் சில்லரைத்தனங்களை முளையில் கிள்ளாமல் வளர விட்டு, வேரோட விட்டு, பின்பு வெட்டும் கோடரியை தேடுவோம்... அல்லது வெளிநாட்டில் கோடரி செய்யச்சொல்லி விலை பேசுவோம். அதிலும் பேரம் பேசி ஊழலில் திளைப்போம்.

இப்படியாக வாழ்ந்து பழக்கப் பட்ட நமக்கு இன்று ஒரு மகத்தான குடியரசு நாள். இந்த நந்நாளில் நாம் சிந்திக்க, நாம் சந்திக்க, நாம் சாதிக்க, எதுவுமே இல்லை.

வாருங்கள் பதிவுலக நண்பர்களே............................

நமக்கு மதுப்புட்டி காத்திருக்கிறது. கிளப்புகள் வெறிச்சோடி கிடக்கின்றன. குத்தாட்ட அழகிகள் காசுக்கு காத்திருக்கிறார்கள். கடற்கரை காற்று நம்மை காணாமல் வறண்டு வீசுகிறது. நமக்கு எவ்வளவோ வேலைகள்.?
கிடைத்திருக்கும் இந்த ஒரு நாள் உபரி விடுமுறையை கொண்டாடாமல் போனால் நம் குலதெய்வம் நம் கண்களை குத்தும். புறப்படுங்கள்.....................

"குடியரசு என்றால் என்ன...? குடிமக்கள் என்பார் யார்..? எதற்காக ஒரு அரசு குடியரசாக இருக்க வேண்டும்..?"

ஐயா, பதிவுலக பெருமக்களே..................

யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.......................

வருத்தமுடன்...
தமிழ்க்காதலன்.

Saturday 8 January 2011

"இப்படியே போனால்"...


என்னங்க எல்லாரும் நலமா இருக்கீங்களா..? நாம இனியும் தொடர்ந்து நலமா இருப்போமா..? என்னாச்சு...? ஏன் இப்படி கேக்குறீங்க..? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது. விசயம் இருக்குங்க... சும்மா சொல்வோமா.

கடந்த பாராளுமன்ற தேர்தல்ல வெற்றிப் பெற்று பெரும்பான்மை இல்லாம கூட்டணி கொலை நிகழ்த்தி சனநாயகம் கொன்று ஆட்சி பிடித்த தனிப் பெரும் கட்சிதாங்க நம்ம காங்கிரசு கட்சி. விளைவு என்ன...? தனிச்சி தன்னிச்சையா எந்த முடிவும் எடுக்க முடியாம, திக்கித் திணறி அரசியல்ல மூச்சி விட்டுக் கொண்டிருக்கிற காங்கிரசு எப்படியாவது தன்னை தக்க வைக்கும் முயற்சியில பல முடிவுகளை எடுத்தது.

அவர்களின் அவசரங்களில் விளைந்த அசிங்கங்கள்....

* உலக பொருளாதார மயமாக்கல்...
* அத்தியாவசிய உணவுப் பொருள்களின் ஆன் லைன் வர்த்தகம்...
* ஏற்றுமதிக் கொள்கையிலும், இறக்குமதி கொள்கையிலும் செய்த தத்து
பித்து மாற்றங்கள்...
* அமெரிக்காவின் கைக்கூலியாய் இந்தியாவை ஆட்டிப் படைப்பது....
* நல்ல நிதியமைச்சர் என்று பெயரெடுத்த "அப்பாவி அறிவு சீவியை", "மோசமான பாரத பிரதமர்" என மாற்றி காட்டியது.
* கட்சியின் அதிகார வரம்புகள் பிரதமரை கட்டுப் படுத்துவது, அரசு கொள்கைகளில் தனக்கு சாதகமானமுடிவுகளை மட்டும் எடுப்பது.
* விலையேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காலம் கடந்து பொது மக்கள், பத்திரிகைகள் சுட்டிக்காட்டி குட்டிய பின் விழித்துக் கொண்டு, கண் கெட்ட பின் சூரியனை வணங்குவது.....

இப்படியாக இந்த தவறான அரசியல் கொள்கையுடைய அரசினால் நாமும் தேசமும் நாறிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே
மொத்த மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களும்தான் அதிகம். மேல்தட்டு மக்கள் குறைவு. ஆனால் மேல்தட்டு மக்கள்தான் நம்முடைய அரசை ஆட்டி வைக்கிறார்கள். பொதுமக்களால் எந்த அரசு அதிகாரியையோ, அரசியல் வாதியையோ தட்டிக் கேட்க முடிவதில்லை.

வருத்தத்துக்குரிய, வெட்க கேடான விசயம் ஒன்று, நம் தேசத்தின் உன்னதமான பாராளுமன்ற நேரத்தை நம் அரசியல் வாதிகளுக்கு பயன் படுத்த தெரியவில்லை. நம்முடைய விலை மதிக்க முடியா பொன்னான நேரம் எப்படி வீணடிக்கப் படுகிறது என்பதை நம்முடைய பாராளுமன்ற நிகழ்வுகள் பார்த்தால் தெரியும்.

அடுத்து நாம் தேர்ந்தேடுக்கும் பாராளுமன்ற எம்.பிக்கள் பாதிக்கு மேல் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. பேசத் தெரிவதில்லை என்பதும் ஒரு பக்க உண்மை. இன்னொரு உண்மை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என்ன என்பது தெரியாமல் இருப்பதும் ஒரு காரணம். நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலட்சியம் அப்படியே பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. நமக்கு தலைவர்கள் மட்டும் சரி இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம்முடைய குடிமகன்கள் சரி இல்லை என்பது மறுக்க முடியா உண்மையாய் இருக்கிறது.

உரிமைகள் கேட்க உரிமை உள்ளவனுக்கு, கடமைகள் செய்யும் பொறுப்பும் காத்திருக்கிறது என்பதை அறியா மக்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து சில விசயங்களில் நம்முடைய இரட்டைத் தன்மைகள் நம்மை உலக அரங்கில் முடிவெடுக்கும் திறமை அற்றவர்களாகத்தான் நம்மைக் காட்டுகிறது. நம்முடைய இளைய சமுதாயம் அளப்பரிய ஆற்றல் பெற்றிருக்கிறது என்று யாரோ முனகும் சப்தம் கேட்கிறது. உண்மைதான். இளைஞர்களின் ஆற்றல் எங்கு பயன்படுகிறது...? நம்முடைய தேசத்திலா..? தேச வளர்ச்சிக்கா..? இல்லையே.. அவர்களின் திறமையை வளர்ந்த நாடுகள் பணத்தால் எடைப் போட்டு வாங்கி கொள்கிறார்கள். நம் அறிவிலும், நம் உழைப்பிலும் அவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் அன்றிலிருந்து இன்று வரை நம் தேசத்தை காட்டிக் கொடுப்பவர்களாகவும்... சுய ஆதாயம் அடையும் குணமும் மாறாதவர்களாகத்தான் இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக்க பயன்படுத்திய இராணுவ வீரர்கள் நம்முடைய இந்தியர்கள். நம்மைக் கொண்டே நம்மை அழித்து நம்மை வைத்தே நம்மை அடிமையாக்கினார்கள். இப்படி செய்வது மாபெரும் துரோகம் என்கிற அறிவு கூட இல்லாமல் சுயநலம் நம்மவர்களை உந்தித் தள்ளி இருக்கிறது.

சரி... இன்றைய தலையாய பிரச்சனையாய் விலைவாசி ஏற்றம் இருக்கிறது. ஒரு கிலோ ஆப்பிளை விட "வெங்காயம்" விலை அதிகம். ஒரு லிட்டர் பாலை விட ஒரு கிலோ "தக்காளி" விலை அதிகம். ஒட்டுமொத்த காய்கறியும், பழங்களும், விலை ஏறிப் போய் இருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்றாற்போல் நம்முடைய வருமானம் இங்கே ஏற்றம் காணவில்லை. இன்னும் இங்கே மாத வருமானம் ரூபாய். 2000 /- தாண்டாதவர்கள் 39 % பேர் இருக்கிறார்கள். அரசு நேரடி அரசாங்க ஊழியர்களான ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை வழங்கி இருக்கிறது. ஒரு அரசாங்க ஆசிரியரை விட தனியாரில் வேலைப் பார்க்கும் ஆசிரியர்கள் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் மாத வருமானம் வெறும் ரூபாய் 4000 முதல் 6000 வரைதான்.

இந்த நிலை ஏன்...? இவர்களின் வாழ்க்கை ஒரு கூலித் தொழிலாளியை விட மோசமானது. தனியார் ஆசிரியர்களை நம்பித்தான் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு உள்ள அரசாங்க ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் அதி மேதாவிகளாய் தங்களை காட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். பொதுவாய் ஒரு பள்ளி ஒரு ஆசிரியரை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய அளவை கூட ஒரு அரசாங்கத்தால் நிர்ணயிக்க முடியவில்லை என்றால் இங்கே என்ன சனநாயகத்தை இவர்கள் கட்டி காக்கிறார்கள்..? ஒருவருக்கு ரூபாய். 18000 ம் சம்பளமும், அதே வேளை செய்யும் மற்றொருவருக்கு ரூபாய்.6000 சம்பளம் என்றால் எப்படி இது சனநாயகம் ஆகும். அவர்களின் வாழ்க்கை எப்படி உயரும்...?
பொதுத் தன்மை இல்லாத கொள்கைகள்... எல்லோருக்கும் சமமான பொருளாதார முன்னேற்றம், கல்வி, ஏன் நம்மால் வழங்க முடியவில்லை. ஒரே காரணம்.... நம்மிடம் பொது நோக்கமில்லை. மனம் இல்லை. மற்றவர்களின் தாழ்மையிலும், ஏழ்மையிலும் நம்மை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள நினைக்கிறோமே தவிர மனிதர்களை சமமாய் பாவிக்கும் மனோ பக்குவம் இல்லாத குணத்தால் நாம் இன்னும் இழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்.

நாம் நலமாயிருக்க நம்முடைய அயலானும் நலமாய் இருக்க வேண்டும்....

இனியேனும் அதை செய்வோமா...?

ஏக்கத்துடன்...
-தமிழ்க்காதலன்.

Wednesday 5 January 2011

"இளைஞர் பட்டாளம்"....!!!

சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாநாடு சென்னை அறிவாலயத்தில் குதூகலமாய் குழப்பங்களுடன் நடந்து முடிந்தது...

இதில் அவர்கள் கட்சியின் "உள்குத்துகள்" பற்றி பல விசயங்கள் பேசப்பட்டன. நிறைய சோகக் கதைகள், அழுகைகள், புலம்பல்கள்..... ஆனால் எல்லோரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாய் பேசினார்கள்... என்ன விஷயம் என்கிறீர்களா....? சொல்கிறேன்.

"அனைத்து மாவட்ட, வட்ட, ஊராட்சி, தலைவர்களும் அவர்களுக்கு மேலிருக்கும் தலைவர்களை வெளிப்படையாய் குறை சொல்லி அழுததும்.., மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர்களை குறை சொல்லிப் புலம்பியதும் ஏகோபித்த காட்சியாய் காண முடிந்தது".

அவர்களின் குறை என்ன தெரியுமா..? நாங்கள் சம்பாதிக்க முடியவில்லை. நாலு காசுப் பார்க்க முடியவில்லை. இப்போ காசுப் பார்த்தாதானே உண்டு.... எங்க பொழப்பில் அமைச்சர் மண்ணை அள்ளிப் போட்டுட்டார் அமைச்சர். அவங்க சொந்தக்காரங்களுக்கு மட்டும்தான் காண்ட்ராக்ட் குடுக்குறார். கட்சிக் காரங்களுக்கு குடுக்க மாட்டேங்குறார். எல்லோரும் வெறுப்பா இருக்காங்க. இப்படி இருந்தா அடுத்த தேர்தல்ல அவங்க ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க.

இப்படிதாங்க ஒவ்வொரு கூட்ட சந்திப்பிலும் முதல்வர், ஸ்டாலின் உட்பட அத்தனை பேரின் முன்னிலையில் உட்கட்சிப் பூசல்கள் அலசப்பட்டன. ஒரு கட்சி எப்படி மக்களுக்கு தொண்டு செய்யலாம்... மக்களின் உண்மையானப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்.? நம்முடைய திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேருகிறது..? மக்களுக்கு அதில் திருப்தியா..? என்பது போன்ற எந்த விசயங்களும் அலசப் படவில்லை.

ஓட்டு மொத்த மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்தும் சுயநலமாய் சம்பாதிப்பது எப்படி என்கிற ஏக்கம்தான் மேலோங்கி இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்கிற விண்ணப்பங்கள் வேறு.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால்.... முதல்வரும்.... இதை ரசித்தப் படி ஒட்டு மொத்தமாய் ஒரே பதிலை சொல்லி இருக்கிறார். அது பின் வருமாறு.

"நீங்கள் எல்லோரும் இப்படி சண்டைப் போட்டுக்கொண்டும், தனித் தனியாக செயல்பட்டுக் கொண்டும் இருந்தால் நாம் தேர்தலில் எப்படி வெற்றிப் பெறுவது..? நீங்கள் முதலில் ஒன்று படுங்கள்... உங்களில் இருக்கும் பகைமை உணர்ச்சிகள் மறந்து ஒற்றுமையாய் தேர்தல் வேலையை தொடங்குங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.... மக்கள் தி.மு. வுக்கு வாக்களிப்பார்கள்... நீங்கள் அதைக் கெடுத்துவிடாதீர்கள்.

இந்த தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றாலும், தோற்றாலும் எனக்கு ஒன்றும் பாதிப்பு வந்து விடாது. ஆனால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.... உங்களின் உழைப்பை பொறுத்து நமது வெற்றி அமையும். எனவே ஒன்று பட்டு வெற்றிப் பெறுவோம். உங்களின் இந்த சின்ன சின்ன குறைகளை எல்லாம் சரி செய்து விடலாம். சென்று வாருங்கள்".

இதுதாங்க நம்ம முதல்வரோட வழிகாட்டுதல்.... அறிவுரை... எல்லாம்.

ஒட்டு மொத்த கட்சியும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதில் குறியாய் இருப்பதை பார்த்தால் இந்திய இருப்பு பெட்டியை காலி செய்தாலும் இவர்களின் ஆசை அடங்காது போல் தெரிகிறது. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காத காட்சிகளில் தி.மு. முதலிடத்தில் இருக்கிறது. கேட்டால்... நானே இன்னும் இளைஞனாகத்தான் இருக்கிறேன் என்கிறார் முதல்வர்... அப்படி அவரை இளைஞராக வைத்திருப்பது அன்பழக இளைஞர் என்கிறார். ஸ்டாலின் இன்னும் இளைஞராக இருக்கிறார். எனக்கு ஒன்னு விளங்கலைங்க...

இவங்களை இளைஞர்கள் என்று வைத்துக் கொண்டால்......

நம்மை எந்தப் பருவத்தில் வைப்பது எனத் தெரியலங்க...? உங்களுக்கு விளங்குதா..?

நான் எல்லாம் பால் குடிக்கும் குழந்தைங்க...? நம்ம தினேஷ் குமார், மனசு குமார், வினோத் நிலா இவங்களும் பால் குடிக்கும் குழந்தைகள்.., அல்லது தத்தி தவழும் கைக்குழந்தைகள் எனக் கொள்ளலாமா...?

வலைப்பூவில் வாழும் அன்பு சொந்தங்கள் எல்லாம் குழந்தைப் பருவம் தாண்டா குழந்தைகள். வலைப்பூவில் குழந்தைகள் எழுதுகின்றன. தமிழகத்தில் தாத்தாக்களே கிடையாது. பாட்டிகள் இல்லவே இல்லை. எல்லாம் அக்காக்களோடு சரி....

இது ஆரோக்கியமான சமூகமா..? இதற்கு மாற்றுக் கிடையாதா...? அரிதாரம் பூசாத அரசியல் வாதிகள் நம்மில் உருவாகாதது ஏன்..? அல்லது உருவாக்கப் படாதது ஏன்..?

சென்ற தமிழகத் தேர்தலின் வேட்பாளர் சொத்து விபரப்படி, நம்ம இளைஞர் ஸ்டாலினுக்கு சொந்தமா ஒரு கார் கூட கிடையாது. ........என்னாச்சு மனசு குமார்...? மயக்கம் போட்டுடீங்க.... அங்க பாருங்க தினேஷ் குமார் இரத்த வாந்தி எடுக்கிறார். வினோத் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுறார்.... பிடிங்க அவரை...

ஆமாங்க... முதல்வருக்கு இன்றைய தேதிக்கு சொந்தமா வீடே கிடையாது... தெரியுமா உங்களுக்கு...? கொஞ்சம் இருங்க ஏதோ சத்தம் கேட்குது என்னனு பார்த்துட்டு வரேன்.... அட நம்ம சித்ராக்கா... என்னாச்சு இப்படி ஓடியாராங்க.. பின்னாடியே பார்த்தா ஒரு கும்பலே வருதுப்பா.....கௌசல்யா...ஆனந்தி, மீனா, சுபத்ரா, பத்மா, எல்லாரும் தலைதெறிக்க ஓடியாராங்க...... என்னன்னு கேட்டா.... முதல்வருகிட்ட பெட்டி (திருத்தம்) பேட்டி எடுக்கணுமாம்...

இந்த தேர்தலுக்கு ஓட்டுப் போட வரமாட்டேன்னு சிரிக்கறாங்க சித்ராக்கா.., அட அங்க யாரு... கே.ஆர்.பி செந்தில் உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்காராம்... மணிஜிய கூப்பிட்டு அவரோட உண்ணாவிரதம் முடிக்க சொல்லுங்கப்பா...

இதுக்கே இப்படின்னா இன்னும் இருக்கே.... என்ன பண்ண போறீங்க...?

அடுத்த முறை அதிர்ச்சித் தகவல்களோட உங்களை சந்திக்கிறேன்....

மீளாத அதிர்ச்சியுடன்.....
-தமிழ்க்காதலன்.
***********************************************************************