Friday 11 March 2011

"மாத்தி யோசி..."


எனதன்பு தமிழுலகுக்கு, வணக்கமுங்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை தமிழ்த்தென்றலில் சந்திக்கிறேன். நாடும் நாமும் ஒரு திருப்புமுனையை சந்திக்கும் தருவாயில் உங்களை சந்திக்கிறேன். கொஞ்சம் நம்மைப் பற்றி சிந்திக்கிறேன்.

நமது இந்தியாவில் வளைகுடா நாடுகளைப் போல மன்னராட்சி நடக்குது என எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்படி சொல்கிறேன் என நினைக்கிறீர்களா..? நம்முடைய தேசம் சுதந்திரம் அடைந்தது என்பதை ஏற்க முடியாத அளவுக்கு இங்கே நிகழ்வுகள் தொடர்கின்றன.

. வாரிசு அரசியல் : நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என மத்தியில் தொடரும் ஒரு பரம்பரை ஆட்சி முறை. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என மாநிலங்களில் தொடரும் பரம்பரை ஆட்சிமுறை. இங்கே எங்கே சனநாயகம் இருக்கிறது. காங்கிரசும், தி.மு.கவும் இவர்களின் பரம்பரை சொத்து என எண்ணிக கொண்டு செயல்படுகிறார்கள். இதை அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லை. காரணம், இவர்களின் வழிகாட்டலில் அவர்களும், தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தியே அரசியல் செய்கிறார்கள். எம்.எல்.ஏ வின் மகன் என்.எல்.ஏ, எம்.பி மகன் எம்.பி, மாவட்ட, வட்டங்களின் வாரிசுகளுக்கு தொடரும் அதிகார பொறுப்புகள்..... இப்படி தொடர்ந்து நடக்கும் ஒரு அரசியலமைப்பை இப்படி சனநாயக அமைப்பு என சொல்வது...?

. பொம்மைத் தலைவர்கள்: மேற்கண்டவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்காத போது இடையில் சொருகப்பட்ட துருப்புச் சீட்டாய் மற்றவர்களை அதிகாரமில்லாத் தலைவர்களாய் கையாள்கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கபட்ட நபர் மன்மோகன் சிங். ஒரு சோளக்காட்டு பொம்மை போல அவருடைய நிலைமை மிக மோசமாய் இருக்கிறது. இந்த தேசத்தின் எல்லாப் பெரிய அழிவுகளும் இவர் காலத்தில் நடந்ததாகவோ, அல்லது அடிக்கோலப்பட்டதாகவோ நாளைய தலைமுறை பேசும் என்பதில் சந்தேகம் இல்லை. அன்னை என்கிற பட்டம் பெற்ற சோனியா பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் வெளியில் வரும் நாள் தொலைவில் இல்லை.

. தூக்குத்தூக்கிகள்: ஒரு தேசத்தின் தலைவர்கள் தவறு செய்யாவண்ணம் அவர்களை வழிநடத்தத் தான் பாராளுமன்றம். அது இங்கே ஒரு நாளும் அந்த கடமைகளை பொறுப்பாய் செய்ததாக தெரியவில்லை. "தண்டனைகள் வழங்க தலைமுறைகள் தாண்டும் நாடு" என்கிற நிலையில் நம்முடைய சட்டமும் நாடும் இருப்பதால், இங்கே "தூக்குத்தூக்கி" வாழ்க்கையில் இலாபம் பார்க்கும் நம்முடைய அமைச்சர்கள்....

. சரத்பவார்: இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் "எண்டோசல்பான்" என்கிற பூச்சிக்கொல்லி மருந்து பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது, சரத்பவார் பதில் தருகிறார், இந்திய விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து அனுமதித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார். நான் கேட்கிறேன்.... இந்தியாவின் அனைத்து அறிவியல் துறைகளிலும் விஞ்ஞானிகளின் சிபாரிசுகள் எடுபட்டிருக்கிறதா..? அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நம்முடைய அனைத்து தரப்பு விஞ்ஞானிகளும் எதிர்ப்புத் தெரிவித்தும் அமெரிக்காவுக்கு அடிமையாய் காங்கிரஸ் செயல்பட்ட விதம் நாடு அறியும்.

. பி.டி கத்திரிக்காய் முதல் அனைத்து விவசாய விதைகளுக்கும் இனி நாம் வெளிநாட்டினரிடம் விதை வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது இந்த அரசு. நம்முடைய பாரம்பரிய விதைகளை அழித்து விட்டு சில தனியார் நிறுவனங்கள் தரும் விதையை நம்பி ஒரு நாடு விவசாயம் செய்தால், விவசாயம் இப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். தடை செய்யப்பட்ட மருந்தும், காய்கறியும், செடியும் நம் தலையில் கட்டாயமாய் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன...?




௬. நல்ல தேயிலை இங்கே அரிதாய் கிடைக்கிறது. நல்ல சர்க்கரை இங்கே கிடைப்பதில்லை. உணவுப் பொருள்களில் முதல்தரமானதை இலாப நோக்குடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பைகளை அடைத்து விற்கும் அநாகரீகம் இங்கேதான் நடக்கிறது. கேட்டால் நம்முடைய மக்களின் வாங்கும் திறன் குறைவு என ஒரு சப்பைக்கட்டுக் காரணம். ஒரு தேசத்தில் உற்பத்தியாகும் பொருளை அந்த தேசத்து மக்கள் வாங்க முடியா நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது யாருடைய குற்றம்..? இதை தொடர்ந்து செய்யும் காங்கிரசை என்ன செய்யலாம். நமக்கு நம்முடைய கரும்பு தரும் சர்க்கரையை திண்ணவும், தேயிலையை குடிக்கவும் நமக்கு உரிமையில்லாத நிலையில் நாம் இருக்கிறோம்.

. தேசத்தின் பிரச்சனைகளைப் பேச, மக்களின் குறைகளை களைய தில்லிப் போகாத முதல்வர்கள், தங்களின் ஆட்சி பீடம் தக்கவைக்கவும், மகன்களின், மகள்களின் சீட்டுக்காகவும் தில்லிப் போகும் சுயநல பதர்களைத்தான் நாம் தலைவர்கள் எனக் கொண்டிருக்கிறோம். இனியேனும் எண்ணிப்பார்ப்போம் என்ன செய்யாலாம்...? என்பதை.
நம்முடைய உரிமைகளையும் கடமைகளையும் வென்றெடுப்போம்.


. இந்த மாறுதல் தராத தேர்தலில், இம்முறையாவது சிந்தித்து செயல்படுவோம்... இலவசங்களுக்கு சோரம் போனதின் விளைவுகளை இன்றைய விலைவாசிகளில் உணர்கிறோம். தப்பான ஆட்சிக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறேதுவுமாகவும் இருந்துவிட முடியாது என்பதற்கு சான்றாக நம்முடைய மாநில ஆட்சி.

மாத்தி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாற்றுத் தேவை. அவசியம் மாற்றுவோம். மாறுவோம்.
இல்லையெனில் அடுத்த முறை குடிக்க கூட சிறுநீரை தூய்மைப் படுத்தும் இலவசத் திட்டங்கள் உங்கள் முன்னாள் வைக்கப் படும். யோசியுங்கள்.



விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்.....

வேறு சங்கதியுடன்.....

என்றும் தமிழனாய்.....
தமிழ்க்காதலன்.






8 comments:

DR.K.S.BALASUBRAMANIAN said...

உணவுப் பொருள்களில் முதல்தரமானதை இலாப நோக்குடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பைகளை அடைத்து விற்கும் அநாகரீகம் இங்கேதான் நடக்கிறது

தேயிலையை குடிக்கவும் நமக்கு உரிமையில்லாத நிலையில் நாம் இருக்கிறோம்.

ரெம்ப நாளாக எனக்கு இந்த ஆதங்கம் உண்டு.....

நல்ல பதிவு

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

//நமது இந்தியாவில் வளைகுடா நாடுகளைப் போல மன்னராட்சி நடக்குது என எண்ணத் தோன்றுகிறது.//

சரிதானே குடும்ப ஆட்சிதானே நடக்குது இங்கும்.....

MANO நாஞ்சில் மனோ said...

//௮. இந்த மாறுதல் தராத தேர்தலில், இம்முறையாவது சிந்தித்து செயல்படுவோம்... இலவசங்களுக்கு சோரம் போனதின் விளைவுகளை இன்றைய விலைவாசிகளில் உணர்கிறோம். தப்பான ஆட்சிக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறேதுவுமாகவும் இருந்துவிட முடியாது என்பதற்கு சான்றாக நம்முடைய மாநில ஆட்சி.//

மக்களே யோசிச்சி ஒட்டு போடுங்க....

MANO நாஞ்சில் மனோ said...

சிந்திக்க, செயல் பட வேண்டிய பதிவு...
வாழ்த்துகள் மக்கா....

தமிழ்க்காதலன் said...

வாங்க பாலா, வணக்கம். உங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன். உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழா.. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க அன்பு மனோ, உங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம்ம மக்கள் யோசிக்க ஆரம்பிச்சிருந்தா நமக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத சூழலில் இன்னும் இந்தியா இருந்திருக்காது.