உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரேத் தலைவர் என சொல்லப் படுகிற (தன்னை சுற்றி இருப்பவர்களால் மட்டும்), அல்லது சொல்லிக் கொள்கிற தற்போதைய தமிழக முதல்வர் திரு.கலைஞர் என்கிற கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். இந்த தமிழகத்தின் ஒரு சாதாரண குடிமகனாய் உங்களிடம் நான் சில விபரங்களையும், கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன். தமிழகத்தின் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க அயராது பாடுபடும் தாங்கள், எமது வினாவுக்கு விடைப் பகன்றால் எம் போன்ற சாதாரண பாமரனின் கவலையும், துயரமும் நிச்சயம் தீரும்.
1969 - 1980 கள் வரையான காலங்களில் ஒரு தி.மு.க தலைவர் இருந்தார். அவர் மு.கருணாநிதி.
1950 - 1969 கள் வரையான காலங்களில் ஒரு தமிழ்த் தொண்டன் தி.மு.க வில் இருந்தார். அவர் அண்ணாவின் தம்பி, போர்ப்படை தளபதி, இவரை நீங்கள் அறிவீர்களா..? அறிவாலயத்தில் வீற்றிருந்த அரிமா அந்த மனிதர். தற்போது அவரை எங்கேனும் பார்த்ததுண்டா... நீங்கள்..?
1980 க்கு பிறகு இங்கே ஒருவர் இருக்கிறார்... தி.மு.க எனும் பொதுசொத்தை தனக்கும், தன் மக்களுக்கும் மட்டுமே சொந்தமான பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றிக்கொண்டு, தன் குடும்ப சொத்து மதிப்பை உலக அளவில் உயர்த்திக்கொண்டு.... பிள்ளைகளுக்குப் பின் பேரப்பிள்ளைகள் வரை தனது ஆட்சி நீடிக்க என்ன வழி எனக் கண்டு பிடித்து மக்களை முட்டாளாக்கி, அப்படியும் இப்படியமாய் ஒரு சுயநலப் போக்கை கையாண்டு, அதற்காக இதுவரை இருப்பதாக சொல்லிவந்த தன்மானம், திராவிட பாரம்பரியம், தமிழர் உணர்வு, ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாய் அடகுவைத்து, தற்போது விற்றே விட்ட அந்த மனிதரின் பெயர்..........
கலைஞர்............
என்கிறது தமிழ்நாடு.
தமிழை உச்சரித்து, தமிழுக்காய் போராடி, பலரின் பாராட்டை பெற்ற அந்த கருணாநிதி, கலைஞராய் மாறியப் பின் கண்டதெல்லாம் "தன்னலம்" மட்டுமே. இப்படி ஒரு அவதாரம் எடுத்து இருந்த புகழையும் இலங்கைத் தமிழன் பிரச்சனை மூலம் இழந்து நிற்கும் அவலம் எதற்காக..? இலங்கைத் தமிழன் மட்டுமல்ல, இங்கிருக்கும் தமிழனும் இப்படித்தான் நினைக்கிறான். கொஞ்சம் உங்களை சுற்றி இருக்கும் உங்கள் சால்ரா தட்டும் மக்களைத் தாண்டி, சினிமாவைத் தாண்டி, வெளியே வந்து ஒரு பாமரன், ஒரு சாமானியனிடம் பேசிப்பாருங்கள். புரியும்.
மக்களிடம் இலட்சியம் பேசி, மேடைகளில் கொள்கைகள் முழங்கி, தமிழைப் பேசி வோட்டு வாங்கிய உங்கள் தன்னம்பிக்கை இப்போது எங்கே..? எதற்காக இப்போது இலவசங்களை சொல்லிச் சொல்லி வோட்டுக் கேட்கிறீர்கள்..? இலவசங்களை தந்து என் போன்ற சாதாரணத் தமிழனை உலக அளவில் பிச்சைக் காரனாய் காட்டும் அதிகாரம் உங்களுக்கு தந்தது யார்..? தமிழர்களுக்கு நியாயமாய் செய்திருக்க வேண்டிய கடமைகளை, பொறுப்புகளை திராவிடக் கழகங்கள் செய்திருந்தால் இந்த மாநிலம் இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாய் மாறி இருக்கும் என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இந்தி எதிர்ப்பில், மக்களை ஏமாற்றி விட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்தி கற்க செய்த மர்மம் நாடறியும். வீராணம் ஏரி திட்டத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதம், மதுக்கடையை மாநிலத்தில் அவிழ்த்து விட்டு மக்களை குடிகாரனாக்கியது. எதிர்க் கட்சியாய் இருக்கும்போது மட்டும் செயல்படுவது, மாநில அவலங்கள் பேசுவது, தான் ஆட்சிக்கு வந்த பிறகு அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, இப்படி இதைத்தானே மாறி மாறி செய்தீர்கள்.
உங்கள் முகம் மக்களிடம் எடுபடாமல் போன காலகட்டம், வெறும்பேச்சுக்கு மயங்காத கூட்டம் பார்த்து இலவசம் எனும் எலும்புத்துண்டை கையில் எடுத்து விட்டீர்கள். இந்த இலவசங்களுக்குப் பின் உள்ள விவரங்களை உங்களால் தர முடியுமா..?
நீங்கள் 2006 ல் ஆட்சிக்கு வந்தபோது....
# தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம், மற்றும் செலவுக் கணக்குகளையும், தனி நபர் மீதான கடன் விபரமும்,
தற்போது நடப்பு ஆண்டு வருமானம், செலவு, தனிநபர்க் கடன் பற்றி வெளிப்படையாய் வெளியிட முடியுமா..?
# உங்களின் இலவசத் திட்டங்களுக்காக தாங்கள் எந்த வருமானத்தை பயன்படுத்தினீர்கள்..? இதற்கான மொத்த செலவுகள் பற்றி சொல்ல முடியுமா..? உலக வங்கி மற்றும், மத்திய அரசாங்கத்தின் கடன், பற்றி வெளியிட முடியுமா..?
# அரசாங்கத்தில் இதுவரை ஒதுக்கிய துறை சார்ந்த ஒதுக்கிடுகளை, தாங்கள் தவறாக பயன்படுத்த வில்லை என உத்திரவாதம் தர முடியுமா..?
# மத்திய அரசாங்கத்தின் உதவித்தொகைகளை, மாநில அரசாங்கம் தருவதாகச் சொல்லி ஏமாற்ற வில்லையா..?
எல்லாப் புகழையும் தானே அடைய வேண்டும் என்கிற வேட்கை உங்களை கடைசிக்காலத்தில் இப்படி கண்மூடித்தனமாய் செயல்பட வைக்கிறது.
# எதிரிகள் இருக்கக் கூடாது என்பது உங்களின் இப்போதைய கொள்கை. இருந்தால் ஒழித்துக்கட்ட பிரயத்தனம் செய்து அதையும் வெளியில் தெரியாமல் மறைத்து விடும் புத்திசாலித் தனம். அரசியல் சாணக்கியத்தனம்.
# உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு முறையும் வன்முறையும், வன்முறையாளர்களும் சகசமாய் கட்டவிழ்த்து விடப்படும் காரணம் என்ன..?
# உற்பத்தியைப் பற்றி பேசாமல், உற்பத்தியை உயர்த்தாமல் இலவசங்கள் எனும் பெயரில், மின்சாரம், சமையல் வாயு, போன்றவற்றின் உபயோகத்தை திடீரென உயர்த்தி அதன் மூலம் செயற்கையான தேவையை அதிகரிக்கச் செய்து, நாட்டில் பொருளாதாரம் சீர்குலையவும், விலை ஏறவும் காரணமாகவில்லையா..?
# அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற நீங்களும் ஒரு முக்கிய காரணம். இலவச வீடு, இலவச அரிசி என நீங்கள் வாய்த் திறந்த வினாடிகளில் இருந்தே.... கண்மூடித்தனமாய் அநியாயமாய் விலை ஏற்றி விற்கப்படும் பொருட்களை பற்றி யோசிக்காமல், வெறும் திட்டங்கள் மூலம் தனி நபர்களை கடனாளியாக்கியது தவிர, தங்களின் சமீபத்திய சாதனை என்ன..?
# இலவசமாய் அரசாங்க செலவில் கிழக்கு கடற்கரை சாலையில் எம்.எல்.ஏக்களுக்கு சொந்த பட்டா என்பது நியாயமா..?
# உங்களின் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய சொத்துக்கணக்கையும், வருமானத்தையும் சொல்ல முடியுமா..?
# ஆக ஒரு கூட்டமாய் சேர்ந்து கொள்ளை அடிப்பதை சாமானியனாய் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு.
உங்களின் தனிப்பட்ட சாதனைகள் எதுவும் இருக்காது என்பது தெளிவாகிறது.
இந்த தள்ளாத வயதில் தாங்கள் ஓய்வெடுக்க விரும்பாமல் இடத்தை தக்க வைக்க போராடும் தன்மையைப் பார்த்தால் உங்களின் பதவி வெறி பட்டவர்த்தனமாய் தெரிகிறது.
காமராசரிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.....
பெரியாரிடம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது....
கக்கனிடம் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது....
அண்ணாவிடமிருந்து நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது....
இன்னும் இருக்கிறது ஏராளம்....
நீங்கள் முழுமையடையா வாழ்க்கையில் இருப்பதாகவே எண்ணுகிறேன்.
உங்களுக்கு திருப்தி என்பது எப்போது வரும்.....?????????????
தமிழகத்தை எப்போது விடப் போகிறீர்கள்...??
தார்மீக பொறுப்பேற்று பதில் சொல்ல முடியுமா...?
பதிலுக்காய்...காத்திருக்கும்,
தமிழ்க்காதலன்.