Saturday 18 December 2010

பறிபோகும் விளைநிலங்கள்



விண்ணவனின் எண்ணமெல்லாம்
கதிரவனின் துணைக்கொண்டு
நீர்த்துளியாய் சேகரித்து
நிலைக் கொண்டு ஓரிடத்தில்
காற்றுக்கு ஆணையிட்டு
மழைத்துளியாய்....!

பச்சை கம்பளம் போர்த்தி
விளைநிலம் செழிக்க
நேர்த்தியாய் அருள்புரியும்
இயற்கை அன்னை இன்று
சிறை பட்டாளோ...!
சிலையானாளோ...!?

அடுக்கடுக்காய் விளையும் பயிர்
'நன்னீரும்' மாறி வர....
'கண்ணீரால்' மூழ்கினவோ...!
ஆசைகொண்டு நேசம் விற்கும்
பாசமற்ற மானிடா, - உன்
அடுத்த வேலை சோறு பொங்க
அடுப்பெரிந்து பயன் என்ன...?
ஆடி மாச காற்றுக்கூட
திசை மாறிப்போன நிலை
கருவறுத்த பாவமெங்கும்
பட்டினியால் வயிறு...
பற்றி எரியும் காலம் இதோ...?!


விலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை...!
அன்னமிட்ட தாயவளின்
அவல நிலை பாடுகிறேன்.

பாதகனே நிறுத்தி விடு
பணம் திண்ண போராயோ...?
பிணம் புதைக்க...
இடம் தேடி அலைவாயோ...?
மனதோடு பேசியவனே
மக்களோடு பேசு.
அவல நிலைகள் புரியும்.


அரசாங்க ஊழியரே....!!
ஊதியமே பெறவில்லையோ...!
ஊமையான உம் கரங்கள்...
விளை நிலத்தின் தரம் மாற்றி
விலை பேசி விற்றீரோ...?!
உம் கரம் அழுகி போகாதோ....?

கூறுபோடும் மானிடா...!
குறுக்கு புத்தி ஏனடா...?
எள்ளின் குணம் அறிவாயோ...!
ஏட்டில் தான் படித்தாயோ....?!
ஏழைக்கேத்த எள்ளுருண்டை
சொல்லும் கதை அறிவாயோ..?!
விளைவிக்கும் நிலமன்றோ..!
நம் தாய்க்கு நிகரன்றோ...!
உன் தாயின் அழுகுரல் தான்
கேட்டறிந்தால் நலமுனக்கு.

பொருள் சேர்க்க துணிந்தாயோ..
தனிப்பிணமாய் நீ செல்ல...?!
தரணி ஆள ஆசையுண்டு...
தனிமையாகும் உன் வாழ்வு.
உண்டு வாழும் உலகினிலே
உனக்கொரு நெல் கிடைக்காதே.

கணக்காக பணம் சேர்த்து
பத்திரமாய் பதுக்கி வைத்து
பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்ணும் மானிடா.

10 comments:

Chitra said...

கணக்காக பணம் சேர்த்து
பத்திரமாய் பதுக்கி வைத்து
பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்ணும் மானிடா.


.....மிரட்டல் வரிகள்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃவிலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை...ஃஃஃஃ

பணத்தக்காக எதுவெல்லாம் செய்வார்கள் நம்மவர்கள்... வரிகள் அருமை சகோதரா...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

ம.தி.சுதா said...

என் சோற்றை பறித்த சித்திராக்கா தலையில் இடி விழ...

தமிழ்க்காவலர் said...

ம.தி.சுதா said...
என் சோற்றை பறித்த சித்திராக்கா தலையில் இடி விழ...

உனக்காக படைத்த சோறு உனக்காக காத்திருக்கும் தட்டி பறிப்பதற்கு எவருமிலர் குறை சொல்லவேண்டாம் பசித்திருக்கும் உள்ளம் தனை பகைகொள்ள வேண்டாமே பகிர்ந்துன்னுவோம் என்றும் இங்கு

Philosophy Prabhakaran said...

அய்யய்யோ அந்த கடைசி படம் பதற வைக்கிறது... ஏற்கனவே அதை கானொளியில் பார்த்து பல நாட்கள் பதறியிருக்கிறேன்...

தேவன் மாயம் said...

வரிகள் அருமை!

Paul said...

அருமையான வரிகள்..!!

Unknown said...

//பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்ணும் மானிடா.//

தம்பி ஒரு நல்ல கவிதையை கடைசி நான்கு வரிகளும், அந்தப்படமும் திசை மாற்றுகிறது ..

அது அகோரிகளின் வாழ்வு .. தனக்காக எந்த உறவையும் வைத்துக் கொள்ளாத தனிப்பட்ட வாழ்வு அவர்களுடையது..

karthikkumar said...

விலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை..///
விவசாயம் வாழ்ந்தால்தான் நாடு செழிக்கும். விவசாயத்தை அழித்துவிட்டு நாம் எப்படி வாழ முடியும்? வரிகள் அனைத்தும் அருமை.

தமிழ்க்காவலர் said...

அன்பு கே.ஆர்.பி.செந்தில் அவர்களுக்கு வணக்கம். உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. விளைநிலங்களில் வீடு கட்டி விவசாயம் மதிக்காது குறைத்து வரும் நம்முடைய அறியாமையை கவிஞர் பேசியிருக்கிறார். அகோரிக்கு வேண்டுமானால் பிணம் தின்னல் ஒருக்கும். சாமானியனுக்கு, சராசரி மனிதனுக்கு இது சாத்தியமோ...? இப்படியே போனால் கடைசியாய் இதுதான் நிகழும் என நிதர்சனம் பேசி இருக்கிறார். நீங்கள் அகோரிக்கான பார்வையை விட்டு பாருங்கள். இந்த கவிதையின் மையம் விளைநிலங்கள். அகோரி அல்ல. மிக்க நன்றி.