Friday, 17 December 2010

"புதுமை செய்வோம்".

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்திய சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள குடிமக்களுக்கு தமிழ்க்காதலனின் வணக்கம். இந்த தேசத்தின் திருத்தப் படாத , ஆனால் திருத்த வேண்டிய விசயம் ஒன்று பேச விழைகிறேன்.

ஆரம்பக் காலம் தொட்டு நாம் நம்முடைய சுயங்களுக்கு 'முக்கியத்துவம்' கொடுக்காமல், வந்தவன் போனவன் சொன்னதே பெரிதென எண்ணி அவனுடைய வழிமுறைகளைப் பின்பற்றுவதே 'நம்முடைய 'கலாச்சாரம்' என மாற்றிக்கொண்டு விட்டோம்.

அப்படி மாறிப்போனவற்றில் ஒன்று நம்முடைய கல்விமுறை. நம்மை அடிமைபடுத்தியவன் நமக்கு விடுதலை கொடுத்தாலும், நாம் இன்னும் விடாப்பிடியாய் அவனுடைய கலாச்சாரத்தை கைப்பிடித்து நடக்கிறோம். இந்த கல்விமுறை பிரிட்டன் அரசால், அரசாங்க உதவியாளர்களை உருவாக்குவதற்கு என்று தயாரிக்கப் பட்ட கல்வி முறை.

"ஆங்கிலேயனுடைய பழக்கம் நம் கையைக்கொண்டே நம் கண்ணைக் குத்த செய்வது". இந்திய போரில் அவனுடைய கூலிப்படைக்கு இந்தியர்களை ஆள் சேர்த்து நம் இந்தியர்களையே கொன்ற சதிகாரன். நம்மைக் கொண்டே நம்மைத் தாக்கி நம் தேசம் பிடித்தவன்.

அவனுக்கு தேவையானதை நம்மிடமிருந்தே பெற்றுக்கொண்டவன். கல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த காரணம் அவனுடைய அரசாங்கத்துக்கு இந்திய அடிமைகள் உதவியாளர்களாய் தேவைப்பட்டதுதான்.

இன்றும் நாம் அதை அப்படியே பின்பற்றுகிறோம். இதன் விளைவு எங்கு போய் நிற்கிறது எனப் பார்ப்போம். ஆங்கிலம் படித்தால் நல்ல உத்தியோகம் என ஆரம்பித்து இன்று நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அவனுடைய கல்வி முறை.

இந்த கல்வியில் மனிதம் சொல்லித் தரப்பட வில்லை. இந்த கல்வியில் நம்முடைய பாரம்பரிய விவசாயம், பழக்கம், இந்த மண்ணுக்குரிய மகத்துவங்கள் சொல்லப் படவில்லை. மனிதனை மனிதனாய் வளர்த்தெடுக்க இந்த ஊதியம் கருதி ஊழியம் செய்யும் கல்வி உதவவில்லை. இது கடந்த 60 ஆண்டு கால இந்திய அனுபவமாக இருந்து வருகிறது. நம்முடைய மனித நேயம் செத்துப்போய் சுயநலம் பெருத்து விட்டது. படித்தவர்கள் அதிகம் பெருகப்பெருக சுயநலமும் பெருகி இந்தியா எப்படி மாறி இருக்கிறது என்கிற நிதர்சனத்தை கண்கூடாக காணமுடிகிறது.

நம்முடைய பெற்றோர்கள் தங்களின் கனவுகளை தங்களின் பிள்ளைகளின் மேல் திணித்து திணித்து எந்திரத்தனமான மனித சமூதாயத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை தன் இயல்பில் வளரும் சூழல் மாறிவிட்டது. குழந்தைகளும், முதியவர்களும் வளரும் இடம் "காப்பகம்" என்றாகிவிட்டது. பெற்றவர்கள் எந்திரமாய் மாறி உழைக்கிறேன் பேர்வழி என்று பணம் கொட்டும் நிலையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். பிள்ளைகளின் வளர்ப்பில், அன்பில், ஒழுக்கத்தில், குடும்ப அமைப்பில் அக்கறை காட்ட முடியா நிலையில் அவர்கள்.

ஆங்கில மோகம் நம்முடைய "இலட்சியமாக" மாறி உலகில் நல்ல ஆங்கிலம் பேசுபவர்கள் இந்தியர்கள் என்கிற பெருமையை பெற்றிருக்கிறோம். பாராட்டுக்குரியது. ஆனால் நம்முடைய தாய்மொழிகளின் கதி என்ன நிலையில் இருக்கிறது. பிராந்திய மொழிகளின் வளர்ச்சி என்ன நிலையில் உள்ளது...?

இந்திய மொழிகளில் உண்மையில் இந்த பூமிக்கு சொந்தமானவர்களின் மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அடுத்த 50 ஆண்டுகளில் பாதி மொழிகள் அழிந்தே போகும் என மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில்தான் வைத்துள்ளோம்.

நாம் ஆங்கிலம் கற்பதல்ல பிரச்சனை. ஆங்கில வழியில் கற்பதுதான் பிரச்சனை. உலகில் எந்த ஒரு நாடும் தன் சொந்த மொழியை புறக்கணித்து விட்டு அந்நிய மொழியை கொலோச்சுவதுக் கிடையாது. அடிப்படைக் கல்வியை தன் சொந்த மொழிகளில்தான் சொல்லித்தருகின்றன. உயர்கல்வியில் விருப்பமொழி வாய்ப்புகள் வழங்கப் படலாம். ஆனால் நம்முடைய இந்தியாவில்தான் ஒரு குழந்தை தன் தாய் மொழியை கற்காமலே ஆங்கிலம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அனைத்து பட்டங்களையும் பெறக் கூடிய அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இது மிகப் பெரிய சமூகத் துரோகம். எந்த மொழியும் மக்களின் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்குமேயானால் அந்த மொழி அழியும் மொழியாகிவிடும். இப்போதைய தமிழகத் தலைமுறைகளிடம் தமிழ் பாடாய்ப் படுகிறது. இன்றைய தலைமுறை தமிழைப் பேசுவதை கேவலமாக நினைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். தமிழ் தெரியாது என்பதே தமிழனின் "மிகப்பெரிய கௌரவமாக" போய்விட்டது. தமிழ் பேசக் கூடாத மொழியாக ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் நடை முறை சட்டம் இருக்கிறது. தமிழ்ப் பேசினால் அபராதம் கட்டச் சொல்லும் அவலம் தமிழ் நாட்டைத் தவிர எங்கேனும் உண்டா...?

தாய் மொழியும் தெரியாது ஆங்கிலத்திலும் புலமை இல்லாது சரியான மொழி அறிவின்றி வளரும் குழந்தைகளை கண்கூடாக பார்க்க முடிகிறது. தாய்வழிக் கல்வியை குறைந்த பட்சம் அடிப்படைக் கல்வி வரையிலாவது சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தன் சொந்த கருத்துக்களை தாய் மொழியில் இன்றைக்கு பிழையில்லாமல் எழுத தெரியாதவர்கள் அதிகம் என்பது மறுக்க முடியா உண்மை.

அன்புக்குரிய பெற்றோர்களே சிந்திப்பீர்களாக, உங்களின் பணத்தாசை குழந்தையை மிருகமாக ஆக்கி விடக் கூடாது. விளையாட அனுமதிக்காத பள்ளிகளும், பெற்றோர்களும் அதிகமாகி விட்ட காரணத்தாலேயே சிறு வயதிலேயே குழந்தைகள் மன அழுத்தம், உடல் நலமின்மை, குற்றசெயல்கள் எனத் திசை மாறிவிடுகிறார்கள்.

தயவுசெய்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். ஒரு சமுதாயம் மொத்தமும் தவறாய் இருக்கிறது என்றால் அதற்கு அந்த சமூகத்தை முன்னேடுத்து சென்ற பெரியவர்களே காரணம். புரிந்து கொள்ளுங்கள்.

நம்முடைய நாளைய தலை முறை தமிழ்த் தெரியாமல், மலையாளம், இந்தி, உருது, கன்னடம்,தெலுங்கு,போன்ற பிராந்திய தாய் மொழி தெரியாமல் வளர்ந்து விடக்கூடுமானால் விளைவாய்... விரைவில் அம்மொழிகளும் இம்மண்ணை விட்டு அழியும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நாம் நம்முடைய தலைமுறைக்கு நம்மை விட்டுச் செல்லப் போகிறோமா..? நம் தடயங்களை நாமே அழிக்கப் போகிறோமா...? யோசியுங்கள்.
ஓரிருவர் முயன்று ஒரு மொழியைக் காப்பாற்றி விட முடியாது. அந்த சமுதாயம் அதன் மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத வரை எந்த மொழியும் அழிவதை தடுக்க முடியாது. புரிந்து செயல் பட்டு நம்முடைய நாகரீகத்தை நம்மிடையே தக்க வைப்போமாக.
அன்புடன்.......
- தமிழ்க்காதலன்.

8 comments:

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத் தூண்டும் புதுமையானதொரு பதிவு நண்பரே . சற்று எழுத்தின் வண்ணத்தை வாசிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது . புரிதலுக்கு நன்றி .

தமிழ்க்காவலர் said...

உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பனித்துளி சங்கர். தொடர்ந்திருங்கள் தோழரே...

Unknown said...

வாக்களித்து விட்டோம். படித்து விட்டு பின்னூட்டம் அளிக்கிறோம்..

Unknown said...

அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கும் என்றும் துணை நிற்க விரும்புகிறோம்..

Unknown said...

இன்றைய கல்வி பற்றியும், ஆங்கில மோகம் பற்றியும் தங்களுடைய பதிவில் உள்ள வார்த்தைகள் சிந்திக்க வைப்பதாக உள்ளது. உண்மையும் கூட..

Chitra said...

தமிழ் தெரியாது என்பதே தமிழனின் "மிகப்பெரிய கௌரவமாக" போய்விட்டது. தமிழ் பேசக் கூடாத மொழியாக ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் நடை முறை சட்டம் இருக்கிறது. தமிழ்ப் பேசினால் அபராதம் கட்டச் சொல்லும் அவலம் தமிழ் நாட்டைத் தவிர எங்கேனும் உண்டா...?


.....தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த சிலர், இன்னும் தமிழ் சரியாக பேச தெரியாமலோ - அல்லது வாசிக்க தெரியாமலோ இருப்பதை கண்டு வேதனை பட்டு இருக்கிறேன். வேறு எந்த மாநிலத்திலும், அந்த மாநிலத்து மொழி தெரியாமல், வளர முடியாது. இங்கே மட்டும், ஏன் இந்த நிலைமை என்று தெரியவில்லை.

தமிழ்க்காவலர் said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும், இந்த அன்பிற்கும் மிக்க நன்றி பாரதி. அன்புடன் தமிழ்க்காதலன்.

தமிழ்க்காவலர் said...

என் அன்பு சகோதரி சித்ராவுக்கு, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள். பாசமுடன் தமிழ்க்காதலன்.