
நிலத்தில் பிறந்து நீரில் வாழும்
நிலநீர் வாழ்வனவாய் எங்களின் வாழ்க்கை.
கலங்களிலும், கட்டுமரங்களிலும்
கழியும் எங்கள் காலம்.
தோணியைக் கொண்டு
தொப்புள்கொடி வளர்க்கிறோம்.
தொலைதூர கடலில் வாழ்வைத் தேடி
தொலைந்து போகிறோம்.
வறுமைக்கு அஞ்சவில்லை....!
வளமைக்கு பஞ்சமில்லை....!!
கரை காணா கடலில்......
உப்புக்காற்றில் உயிர்த்திருக்கும்
எங்கள் சுவாசம்.
"மீன்களைப் பிடிக்கும் கருவாடாய் நாங்கள்"...
கசங்கித்தான் போகிறோம்....
கண்கலங்கி வாழ்கிறோம்.
எவர் வாழ்விலும் நாங்கள் மண்ணை போட முடியாது.
தண்ணீரில் வாழும் தவளைகள் நாங்கள்.
முதலைகளை விட அதிக பயம் தரும்
எங்கள் முதலாளிகள்.
மனிதர்களாய் கூட மதிக்காத
எங்கள் தேசத்து மந்திரிகள்.
மரணத்தை மடியில் கட்டிக் கொண்டு
கண்ணுக்குத் தெரியா ஆழ்கடலில் காத்திருக்கிறோம்.
வளையில் சிக்கும் மீன்களுக்காய்...
................................................................
வசமாய் சிக்குகிறோம்......
சிங்களவன் வளையில்
மீன்களாய் நாங்கள்.
துப்பாக்கி தோட்டா தொட்டுப் பார்க்க பயம்.
தோட்டாக்களை முத்தமிட்டே
கிழிக்கப் படும் எங்கள் உதடுகளில்
இன்னுமிருக்கிறது இந்தியாவின் மீதான நம்பிக்கை ................................................
கடைசிப் புன்னகையாய்...!!
சிறுமீன் வலைவிழுமின் மீண்டும்
கடல் சேர்க்கும் எங்கள் கருணை....
ஏன் இல்லாமல் போனது இந்திய அரசுக்கு...?
வலைசிக்கிய மீனாய் வாடும் எங்கள் வாழ்க்கை.
கடலில் மிதக்கும் எங்கள் பிணங்களை
கடல் தாய் கரைசேர்க்கும் பொறுப்பு
காணமுடியவில்லை இந்த அரசிடம்...
எவரும் கண்டு கொள்ளா எச்சங்களா நாங்கள்....?
இந்திய அரசாங்கத்தின் மிச்சங்களா நாங்கள்...?
கரைக்கும் கடலுக்கும் இடையே கண்ணீர் சிந்தும் போதா
உதவிக்கரம் கேட்கிறோம்....?
செந்நீர் சிந்தும் போதுதானே கேட்கிறோம்...
நிராயுதபாணியாய் நிற்கும் வீரனை
கொல்லாதே என்கிறது யுத்ததர்மம்.
மீனவனை கொல்லலாம் என எங்கேனுமுண்டோ...?!

ஆழ்கடலில் இந்திய இறையாண்மையை விலை பேசுகிறது.
வயிற்றுப் பிழைப்புக்கு வந்தவனை
வன்முறையாளன் என்கிறான் சிங்களன்.
வாய்மூடி நிற்கிறாயே என் தேசமே..........??!!
வாய்மையே வெல்லும்......?!
எங்கே...? எப்போது...?
வந்தே மாதரம்........!
வங்கக்கடல் யார் சொந்தம்...?
ஜெய் ஹிந்த்.........!
சாகும் போது சொல்லிக்கொள்ளும்
தாரக மந்திரமோ....!
வீரம் விளைந்த என் தேசமே...........
சோரம் போகும் புத்தி உனக்கெப்படி சொந்தமானது.........?
பங்காளிக்கு பந்தி வைக்கலாம் ....,- நீ
பகையாளிக்கல்லவா பந்தி வைக்கிறாய்...!
முடிச்சிட்டவனுக்கு முந்தி விரிக்கலாம்
முகமூடிக்கு விரிக்கலாமோ....?!
இந்தியாவின் எல்லை தில்லி மட்டும்தான்....
பிரதமரின் குடும்பத்துக்கு வேண்டியவர்கள் மட்டுமே இந்தியர்கள் காங்கிரசுக்கு சொந்தமானவர்கள் மட்டுமே இந்தியாவின் வாரிசுகள்.
கடலுக்கு சொந்தமான நாங்கள்.....
"எடுப்பார் கைப்பிள்ளை",- எங்களை
கண்டவனும் சுடலாம்.......
அவன் வாய் சிவக்கும் வெற்றிலைக்கு சுண்ணாம்பாய்
எங்கள் இரத்தம்....
கேளுங்கள் இந்திய குடிமகன்களே...........
வருங்காலத்தில் கடல்நீரின் நிறம் நீலமல்ல...!!
இரத்தச் சிவப்பு.
எழுதிக்கொள்ளுங்கள்........
உங்கள் பாடத்திட்டத்தில் ........
இந்தியாவில் 'மீனவன்' என்றொரு இனம் இருந்தது என்று....
இந்திய அரசின் கையாலாகத் தனத்தினால்
கடலுக்குள் காணாமல் போனவர்கள் என்று....
கடலும் நிலமும் காப்பாற்றிய ஒரு இனம்
கவனிப்பாரற்று கடலுக்குள் அழிந்து போனக்
கதையை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.
தமிழகத்துக் கடற்கரைகளில்.....
இனி நண்டுகள் கூட நகராது.
தமிழகத்து மண்ணில் மனிதம் நேசிக்கும்
தலைவனை பெற்றெடுக்கும்
தமிழச்சிகள் இல்லையோ....?
எங்கள் சாபங்களை உங்களின் வரமென எண்ணாதீர்கள்...?
கணவனுக்காய் கனவுகள் சுமந்து கரையில் காத்திருக்கும் செம்படவச்சியாய் கொஞ்சம் சிந்தியுங்கள்....
வருவான்.... வாழ்க்கைத் தருவான் என்கிற
நம்பிக்கையில்........
துப்பாக்கித் தோட்டாக்கள்
தின்று தீர்த்த மிச்சங்களை தராதீர்கள்.......
அவள் தாலிப் பறிக்காதீர்கள்...
கலங்கும் கண்களுடன் கடல் நோக்கும்
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்...
ஓன்று...........
நாங்கள் இந்திய குடிமகன்கள் என்றால்......
நிரந்தரமாய் ஒரு தீர்வுக்கு வாருங்கள்....
எங்களின் நிம்மதிக்காய்......
திரைமறைவு நாடகங்கள் வேண்டாம்.
தீர்க்கப் பட வேண்டிய வாழ்க்கை இது.
மற்றொன்று...........
எங்களை "இந்தியாவின் குடிமகன் இல்லை" என்றறிவித்து விடுங்கள். உங்களிடமிருந்து "எங்களின் அடையாளங்களை" அழித்து விடுங்கள்.
சர்வதேச சந்தையில் சாதாரணமாய் கிடைக்கிறதாம்.......
அத்தனை ஆயுதங்களும்............
நாங்களே பார்த்துக்கொள்கிறோம்....... சிங்களவனை
பார்த்துப் பார்த்துக் கொல்கிறோம்.
எங்கள் கைகளிலும் உரமிருக்கிறது.
எங்கள் நெஞ்சிலும் திமிரிருக்கிறது.
கடல் எங்களுக்கு அத்துபடி..!
காற்று எங்கள் அத்தைமடி..!!
எங்கள் கரங்களிலும், கட்டுமரங்களிலும்
ஏ.கே - 47.
இன்னும் நவீன ஆயுதம் ஏந்தி மீன் பிடிப்போம்.
அப்போது வீழ்வது தமிழனல்ல...
அப்போது சாவது தமிழனல்ல...
எங்கள் பிள்ளைகளுக்கு தோட்டாக்கள் வைத்து
கணக்குச் சொல்லிக்கொடுங்கள்.
துப்பாக்கி நிறுத்தி தாண்டச் சொல்லுங்கள்.
எதற்கும் உதவாத ஒரு இராணுவத்தை விட
உயிர்க் காக்கும் எங்கள் உறவுகள் மேல்....
எங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
முடிவெடுங்கள்................

நாங்கள் மடிந்து அழியும் முன்.......
உங்களின் பதிலுக்காய்........
வாழ்வை எதிர்நோக்கி காத்திருக்கும்
மீனவனாய்............
-தமிழ்க்காதலன்.